மணிலா: கிறிஸ்துவ மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பிலிப்பீன்சில் கட்டாய பாலியல் கல்வி மசோதா கடும் எதிர்ப்பைக் கிளப்பி உள்ளது.
சமய நற்பண்புகளை அந்தக் கல்வி பலவீனப்படுத்திவிடும் என்றும் குழந்தைகள் மீதான பெற்றோரின் கட்டுப்பாடு கைமீறிவிடும் என்றும் விமர்சிக்கப்படுகிறது.
ஆயினும், பாலியல் கல்வியை ஆதரித்தும் பலர் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இளவயது கர்ப்பிணிகள் உருவாவதைத் தடுக்க குழந்தைகளுக்கு அந்தக் கல்வி அவசியம் என்பது அவர்களின் கருத்தாக உள்ளது.
இளம் பருவ கர்ப்பத் தடுப்புச் சட்டம் அல்லது செனட் மசோதா 1979, நாட்டில் அதிகரித்து வரும் இளவயது கர்ப்பிணிகள் பிரச்சினைக்குத் தீர்வுகாண எல்லாப் பள்ளிகளிலும் பாலியல் கல்வியைக் கற்றுத்தர வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
அரசாங்கம் மற்றும் தனியார் பள்ளிகளில் அந்தக் கல்வியைக் கற்பதும் கற்பிப்பதும் கட்டாயம் என்கிறது அந்த மசோதா. உயர் தொடக்கநிலைப் பள்ளி முதல் உயர்நிலைப் பள்ளிகள் வரை பயிலும் 10 வயது முதல் 19 வயது வரையிலான மாணவர்கள் அந்தக் கல்வியைக் கற்பது அவசியம் என்று மசோதா தெரிவித்து உள்ளது.
ஆனால், அந்த மசோதா சுமுகமாக நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையை பழமைவாதிகள் மற்றும் சமயக் குழுவினரின் எதிர்ப்பு தகர்த்துவிட்டது.
பிலிப்பீன்சில் பிறக்கும் 20ல் ஒரு குழந்தை, 15 வயதுக்கும் 19 வயதுக்கும் இடைப்பட்ட சிறுமியருக்குப் பிறப்பதாக குழந்தை உரிமைக் கட்டமைப்பு (CRN) என்னும் அரசு சாரா அமைப்பு தெரிவித்து உள்ளது.