பெர்த் நகரில் காற்றுக் கொந்தளிப்புக்கு இடையே பாதுகாப்பான முறையில் விமானத்தைத் தரையிறக்கியதற்காகச் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானிக்குப் பாராட்டுகள் குவிந்துள்ளன.
கடந்த மாதம் 31ஆம் தேதி பெர்த் அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்கும்போது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் கடுமையாக ஆட்டங்காணும் காணொளி சமூக ஊடகங்களில் பரவிவருகிறது.
ஒரு கட்டத்தில் விமானத்தின் சிறகுகளில் ஒன்று ஓடுபாதையில் மோதக்கூடிய அளவுக்குக் கீழே இறங்கியது.
“சிங்கப்பூரிலிருந்து பெர்த்திற்குச் சென்றுகொண்டிருந்த எஸ்கியூ213 விமானம், காற்றுக் கொந்தளிப்புக் காரணமாகத் தரையிறங்கும்போது சிரமத்தை எதிர்கொண்டது,” என்று சிஎன்ஏயின் கேள்விக்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் பதிலளித்தது.
அதன் காரணமாக, விமானிகள் ஓடுபாதையில் தரையிறங்குவதைக் கைவிட்டு விமானத்தை மீண்டும் மேல்நோக்கிச் செலுத்தினர் என்று அது குறிப்பிட்டது.
அதன்பின்னர் விமானம் தரையிறக்கப்பட்டது.
விமானம் தரையிறங்கும் காணொளியைப் பகிர்ந்துகொண்ட ஃபேஸ்புக் பயனீட்டாளர் கிரிஸ் பெர்ரி, தமது சகோதரி அந்த விமானத்தில் இருந்ததாகக் குறிப்பிட்டார்.
விமானம் ஓடுபாதையில் கிட்டத்தட்ட மோதியிருக்கும் என்ற அவர், இரண்டாம் முறை தரையிறங்க முற்பட்டபோது காற்றில் சாதகமான ஓர் இடைவெளியை விமானிகள் கண்டறிந்ததாகத் தெரிவித்தார்.
பிற்பகல் 12.30 மணியளவில் விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியது.
