தாய்லாந்தும் கம்போடியாவும் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று சிங்கப்பூர் அழைப்பு விடுத்துள்ளது. கூட்டுப் பிரகடனத்தின்படி இரு தரப்பும் நடந்துகொள்ள வேண்டும் என்றும் அது கூறியது. தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையிலான நீண்டகால உறவுக்கு அவ்வாறு செயல்படுவது முக்கியம் என்று சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சு புதன்கிழமை (டிசம்பர் 10) தெரிவித்தது.
எல்லையோரத்தில் மோதல்கள் அதிகரித்திருக்கும் நிலையில், இரு தரப்பும் பேச்சின் மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வேண்டும் என்று சிங்கப்பூர் கேட்டுக்கொண்டது.
“தாய்லாந்து-கம்போடிய எல்லைப் பகுதியில் சண்டை மோசமடைந்திருப்பதும் இரு தரப்பிலும் உயிர்ச்சேதம் ஏற்பட்டிருப்பதாக வரும் தகவல்களும் சிங்கப்பூருக்கு அதிகக் கவலையைத் தந்துள்ளது,” என்று சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் கூறினார்.
தாய்லாந்து, திங்கட்கிழமை கம்போடியாமீது ஆகாயத் தாக்குதல்களை நடத்தியது. சண்டை மீண்டும் மூண்டதற்கு இரு தரப்பும் ஒன்று மற்றொன்றைக் குறைகூறுகின்றன. இரு தரப்பிலும் உயிருடற்சேதம் ஏற்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தாய்லாந்து-கம்போடிய எல்லைப் பகுதியிலிருந்து ஆயிரக் கணக்கானோர் வேறு இடங்களுக்குச் செல்வதாகக் கூறப்பட்டது.
சண்டை நடக்கும் பகுதிகளுக்குச் செல்லவேண்டாம் என்று வெளியுறவு அமைச்சு சிங்கப்பூரர்களுக்கு ஆலோசனை கூறுகிறது.
“கம்போடியாவிலும் தாய்லாந்திலும் இருக்கும் சிங்கப்பூரர்கள், அதிகாரத்துவத் தளங்களின் செய்திகளை அணுக்கமாகக் கவனிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். உள்நாட்டு அரசாங்கத்தின் ஆலோசனைகளைப் பின்பற்றுமாறும் தனிப்பட்ட பாதுகாப்புக் குறித்து விழிப்புடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்படுகின்றனர்,” என்று வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.
தாய்லாந்து அல்லது கம்போடியாவில் இருக்கும் சிங்கப்பூரர்கள் அல்லது அங்குச் செல்வோர், வெளியுறவு அமைச்சின் இணையத்தளத்தில் பதிந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
கம்போடியா அல்லது தாய்லாந்தில் ஏற்கெனவே இருப்போர் உதவி தேவைப்பட்டால் நோம் பென் அல்லது பேங்காக்கில் இருக்கும் தூதரகங்களை நாடலாம். அல்லது வெளியுறவு அமைச்சின் 24 மணிநேரச் சேவை அலுவலகத்தைத் தொடர்புகொள்ளலாம்.

