சிங்கப்பூருக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான அரசதந்திர உறவுகள் தொடங்கி 60 ஆண்டுகள் ஆகிவிட்டன.
அதனைச் சிறப்பிக்கும் வகையில் இரண்டு புதிய அஞ்சல்தலைகள் வெளியிடப்பட்டுள்ளன.
தாய்லாந்து அஞ்சல் நிலையத்துடன் இணைந்து இந்த அஞ்சல்தலைகள் வெளியிடப்படும் என்று சிங்போஸ்ட் புதன்கிழமை (செப்டம்பர் 17) தெரிவித்தது.
புதிய அஞ்சல்தலைகளில் ஒன்றில் சிங்கப்பூரின் சைனாடவுனில் உள்ள டெம்பிள் ஸ்திரீட் இடம்பெறும். மற்றோர் அஞ்சல்தலையானது தாய்லாந்துத் தலைநகர் பேங்காக்கில் உள்ள தா சாங் வாங் லுயாங் கப்பல்துறையையும் சமூக இடத்தையும் தாங்கியிருக்கும்.
செப்டம்பர் 19ஆம் தேதியிலிருந்து புதிய அஞ்சல்தலைகள் விற்பனைக்கு விடப்படும்.
ஒருவழிப் பாதையான டெம்பிள் ஸ்திரீட், நியூ பிரிட்ஜ் சாலையையும் சவுத் பிரிட்ஜ் சாலையையும் இணைக்கிறது. இது வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ மாரியம்மன் கோயிலுக்கு அருகில் உள்ளது. டெம்பிள் ஸ்திரீட், சைனாடவுன் பராமரிப்பு வட்டாரத்தின் ஒரு பகுதியாகும்.
பேங்காக்கில் உள்ள துடிப்புமிக்க சந்தை, வரலாற்றுச் சிறப்புமிக்க சாவ் பிராயா ஆறு ஆகியவை இருக்கும் பகுதியில் தா சாங் வாங் லுவாங் கப்பல்துறை அமைந்துள்ளது.