சிங்கப்பூர், இவ்வாண்டு மலேசியாவின் சரவாக், சாபா மாநிலங்களில் துணைத் தூதரகங்களை நிறுவவிருக்கிறது.
மலேசிய அரசாங்கம் அவற்றுக்கான ஒப்புதலைச் சென்ற மாதம் வழங்கியது. மலேசியாவுக்கான சிங்கப்பூர்த் தூதர் வேணு கோபால மேனன் அதனைத் தெரிவித்தார்.
ஒப்புதல் கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து, கூச்சிங்கிற்கும் கோத்தா கினபாலுவிற்கும் செல்ல முடிவெடுத்ததாக அவர் சொன்னார். துணைத் தூதரகங்களை அமைப்பதற்கான உத்தேச இடங்களை மதிப்பீடு செய்யவே அங்கு சென்றதாகத் திரு மேனன் கூறினார். துணைத் தூதரகத்தைத் தொடங்குவதற்குத் தற்காலிகமாகப் பொருத்தமான இடத்தை அடையாளம் காண்பது நோக்கம் என்றார் அவர்.
சரவாக் மாநில முதலமைச்சர் அபாங் ஜொஹாரி ஓப்பெங்கைச் சத்ரியா பெர்த்திவி வளாகத்தில் சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் திரு மேனன் பேசினார். பொருத்தமான இடங்கள் அடையாளம் காணப்பட்ட பிறகு, மலேசியாவின் வெளியுறவு அமைச்சிடமிருந்து சிங்கப்பூர் அவற்றுக்கான அதிகாரபூர்வ ஒப்புதலைப் பெறும் என்று அவர் சொன்னார். அதன் பின்னர், துணைத் தூதரகங்களில் அதிகாரிகள் பணியமர்த்தப்படுவர் என்று திரு மேனன் குறிப்பிட்டார்.
“இவ்வாண்டு நடுப்பகுதிக்குள் துணைத் தூதரகங்களை நிறுவி, இயக்க முடியும் என்று நம்பிக்கை கொண்டுள்ளோம்,” என்றார் அவர்.
சிங்கப்பூருக்கும் கிழக்கு மலேசியாவுக்கும் இடையில் வர்த்தகம், முதலீடு, சுற்றுப்பயணம் உள்ளிட்ட துறைகளில் உறவை வலுப்படுத்த அவை உதவியாக இருக்கும் என்று திரு மேனன் கூறினார்.
சிங்கப்பூருக்கும் சராவாக்கிற்கும் இடையிலான வர்த்தகம் தொடர்ந்து வளர்ச்சி கண்டுவருவதாக அவர் தெரிவித்தார். மேலும் அணுக்கமான பொருளியல் ஒத்துழைப்புக்கு நிரந்தர அரசதந்திரத் தொடர்பை ஏற்படுத்துவதற்கான தேவை எழுந்துள்ளதையே அது காட்டுவதாகத் திரு மேனன் சுட்டினார்.
அங்குள்ள ‘முலு குகைகள்’ போன்ற இடங்களுக்குச் சுற்றுப்பயணம் போகவேண்டும் என்ற ஆர்வமும் சிங்கப்பூரர்களிடையே இருக்கிறது. துணைத் தூதரகங்களை நிறுவ அதுவும் ஒரு காரணம் என்றார் திரு மேனன்.
தொடர்புடைய செய்திகள்
சரவாக்கில் சுற்றிப்பார்ப்பதற்கு மேலும் பல இடங்கள் இருப்பதாகவும் அவர் சொன்னார். துணைத் தூதரகங்களை அமைப்பதன்வழி கூடுதல் சுற்றுப்பயணிகளை ஈர்க்க முடியும் என்றும் இருதரப்புக்கும் இடையில் சுற்றுலாத் தொடர்புகளை ஊக்குவிக்க முடியும் என்றும் நம்புவதாகத் திரு மேனன் குறிப்பிட்டார்.
சென்ற மாதம் (2025 டிசம்பர்) நான்காம் தேதி சிங்கப்பூர்ப் பிரதமர் லாரன்ஸ் வோங், சாபாவிலும் சரவாக்கிலும் துணைத் தூதரகங்களை நிறுவ மலேசியா அதிகாரபூர்வமாக ஒப்புக்கொண்டதை வரவேற்பதாகக் கூறினார். இரு நாட்டு மக்களுக்கும் இடையில் உறவுகளை வலுப்படுத்த அது முக்கியப் படிக்கல் என்றார் அவர்.

