ஜெரூசலம்: ஈரான்மீது அமெரிக்கா இவ்வார இறுதியில் தாக்குதல் நடத்தக்கூடும் என்று அமெரிக்கத் தூதர் ஒருவர் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 23) தெரிவித்தார்.
அமெரிக்கா, ஈரான் இருதரப்பும் ஒன்றையொன்று தாக்கப்போவதாக மிரட்டல் விடுத்துவரும் வேளையில் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.
இவ்வாரம் தாக்குதல் நடக்குமா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலலிளிக்கும் விதமாகத் துருக்கி நாட்டிற்க்கான அமெரிக்கத் தூதர் டாம் பராக், மாரியோ நவால் வழிநடத்திய வலையொளி நிகழ்ச்சியில் அவ்வாறு கருத்துரைத்தார். ஆம், நிச்சயமாக என்று அவர் நெறியாளரிடம் பதில் கூறியிருந்தார்.
“அதிபர் டோனல்ட் டிரம்ப் ஒப்பந்தத்தை எட்டுவதில் மிகத் தெளிவாக உள்ளார். பல மாதங்களாகப் பேச்சுவார்த்தைகள் நடந்துவருகின்றன,” என்று மத்திய கிழக்குக்குப் பயணம் மேற்கொண்ட திரு பாராக் கூறினார்.
வரும் செவ்வாய்க்கிழமை நாட்டில் தேர்தலை எதிர்கொள்ளும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவும் அண்மைய நாள்களாக ஈரானின் தலைமைத்துவத்தைக் கவிழ்க்கப்போவதாக கூறிவருகிறார்.
அரசதந்திரப் பேச்சுவார்த்தைகள் நெடுநாள்களாக எவ்விதத் தீர்வையும் எட்டாத நிலையில் தாக்குதல் நடத்தும் திட்டத்தை அதிபர் டிரம்ப்பும் நேரடியாக நிராகரிக்கவில்லை. இருப்பினும் நவம்பர் 3ஆம் தேதி நடக்கவுள்ள அமெரிக்க இடைத் தவணைத் தேர்தல் முடியும்வரை போர் தொடங்காது என்பதை அவர் ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தார்.
இதனிடையே பேச்சுவார்த்தைகள் தோல்வியுற்று, மத்திய கிழக்கில் அமெரிக்கத் தாக்குதல் மீண்டும் தொடங்கினால், கடலுக்கடியில் அமைக்கப்பட்டுள்ள தொலைத்தொடர்புக் கம்பிவடங்கள் போன்ற கட்டமைப்புகளைக் குறிவைக்கப்போவதாக ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அப்பகுதியில் ஆழ்கடலில் இயங்கும் அக்கம்பி வடங்களை அழிப்பதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் முழுமையான திட்ட வரைபடங்களுடன் வைத்திருப்பதாக ஈரான் தெரிவித்தது.
அடையாளம் தெரிவிக்க மறுத்த ஈரானின் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இருவர் இது குறித்துக் கருத்துரைத்தனர். எவ்வாறு ஆழ்கடல் கம்பிவடங்கள் அழிக்கப்படும் என்பதை விவரிக்காத அவர்கள், தொலைத்தொடர்பு, இணையம் போன்றவற்றை நீண்டநாள்களுக்குத் தடுமாறச் செய்து அவற்றைப் பழுதுபார்க்கும் முயற்சிகளையும் முறியடிக்கும் விதமாக ஈரான் செயல்படும் என்று தெரிவித்தனர்.
ராணுவத் தளங்கள் உட்பட அமெரிக்காவின் ரகசியக் கட்டமைப்புகளும் முற்றாக அழிக்கப்படும் என்று அவ்விருவரில் ஒருவர் கூறினார்.
