கொழும்பு: இணைய மோசடி நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்படும் என்று சந்தேகிக்கப்படும் தொடர்புக் கருவிகளைக் கடத்த முயன்றதாக நம்பப்படும் சீன நாட்டவர் ஒன்பது பேர் இலங்கையின் முக்கிய அனைத்துலக விமான நிலையத்தில் வியாழக்கிழமை (ஏப்ரல் 16) கைதுசெய்யப்பட்டதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் இலங்கையின் வடமேற்குப் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றிலிருந்து இணைய மோசடிச் செயல்களை மேற்கொண்டதற்காக 152 வெளிநாட்டவரைக் காவல்துறையினர் கைதுசெய்தனர். அவர்களில் பெரும்பாலானோர் சீனாவைச் சேர்ந்தவர்கள். அதனைத் தொடர்ந்து தங்கள் நாட்டவர் இலங்கையில் மோசடிச் செயல்களை மேற்கொள்வதைத் தடுக்க உள்ளூர் அதிகாரிகளுடன் அணுக்கமாகச் செயல்பட்டு வருவதாக கொழும்பில் இருக்கும் சீனத் தூதரகம் தெரிவித்திருந்தது.
அச்சம்பவத்துக்கு இரண்டு வாரங்கள் கழித்து இந்த ஒன்பது பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை விமான நிலையத்தை வந்தடைந்த சீனாவைச் சேர்ந்தவர்களிடம் 383 பயன்படுத்தப்பட்ட கைப்பேசிகள், 101 கையடக்க கணினிகள், ஆறு வைஃபை ரெளட்டர் சாதனங்கள் மற்றும் ஜிபிஎஸ் உணர்கருவிகள் ஆகியவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக இலங்கை சுங்கத்துறை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். அக்கருவிகள், சந்தேக நபர்களின் உடல்களுடன் இணைத்து ஒட்டப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
அப்பொருள்களின் மொத்த மதிப்பு 24 மில்லியன் இலங்கை ரூபாய் (96,860 வெள்ளி) என்றும் அவை பறிமுதல் செய்யப்பட்டன என்றும் அவர் சொன்னார்.

