நேப்பாள வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 28 பேரின் குடும்பங்களுக்கு சொக்சோ 174,000 ரிங்கிட் நிதி உதவி: அமைச்சர் ரமணன்

நேப்பாள வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 28 பேரின் குடும்பங்களுக்கு சொக்சோ 174,000 ரிங்கிட் நிதி உதவி: அமைச்சர் ரமணன்

படம்: த சன்

04 Nov 2026 - 10:45 pm

2 mins read

கோலாலம்பூர்: நேப்பாள-திபெத் எல்லைப்பகுதியில் இவ்வாண்டு ஆகஸ்ட் 26ஆம் தேதி ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட 54 பேரில் 28 பேர் மலேசிய சமூகப் பாதுகாப்பு அமைப்பான ‘சொக்சோவின்’ சந்தாப் பங்களிப்புத் தகுதி வரம்புகளைப் பூர்த்தி செய்துள்ளனர்.

அதனால், அவர்களது குடும்பத்தினர் உரிய நிவாரண நிதிப் பயன்களைப் பெறத் தகுதி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்த உதவித்தொகையான 174,000 ரிங்கிட்டில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடியாக வழங்கப்பட்ட 3,000 ரிங்கிட் அவசர நிதியுதவியும் இயலாமைத் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் வாழ்வாதாரப் பிழைப்பூதியமும் அடங்கும் என மலேசிய மனிதவள அமைச்சர் ஆர். ரமணன் தெரிவித்தார்.

கோலாலம்பூரில் புதன்கிழமை (நவம்பர் 4) நடைபெற்ற நேப்பாள வெள்ள நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சிக்குப் பிறகு நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்துகொண்டார்.

அப்போது பேசிய அவர், “தகுதிபெற்ற 28 குடும்பங்களில் 16 குடும்பங்கள் நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சிக்கு நேரில் வருகையளித்தன. அன்புக்குரியவர்களின் நிலையை அறிய முடியாமல் அக்குடும்பங்கள் நிச்சயமற்ற நிலையை எதிர்கொண்டு வருகின்றன,” எனக் கூறினார்.

அவர்களின் ஆழமான மனக்கவலையை எந்தவொரு உதவியாலும் முழுமையாகப் போக்க முடியாது என்பதை அரசு நன்கு அறிவதாகவும் ஆயினும், குடும்பத்தின் முதன்மை வாழ்வாதாரத்தை இழந்தவர்கள் இந்தத் துயரச் சுமையைத் தனியாகச் சுமக்கக்கூடாது என்பதே அரசின் முக்கிய நோக்கம் எனவும் திரு ரமணன் குறிப்பிட்டார்.

எனவே, தகுதியுடையோருக்கு உரிய ஆதரவு போய்ச் சேர்வதை மனிதவள அமைச்சு சொக்சோ வழி உறுதிசெய்யும் என்றார் அவர்.

நவம்பர் 4ஆம் தேதி நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் சொக்சோ வாரியத் தலைவர் சுபஹான் கமால், சொக்சோ தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் முகமது அஸ்மான் அஜீஸ் முகமது ஆகியோர் கலந்துகொண்டனர்.

குறிப்புச் சொற்கள்