ஐக்கிய அரபுச் சிற்றரசுகளின் தூதரை வெளியேற்றிய சோமாலியா

ஐக்கிய அரபுச் சிற்றரசுகளின் தூதரை வெளியேற்றிய சோமாலியா

அபுதாபியில் இருந்து சோமாலியா தனது தூதரையும் மீட்டுக்கொண்டது
படம்: ராய்ட்டர்ஸ்

19 Nov 2026 - 10:30 pm

2 mins read

மொகடிஷு: உள்நாட்டு விவகாரங்களில் தலையிட்டு, அதன் இறையாண்மையைக் கேள்விக் குறியாக்கிவிட்டதாகக் கூறி சோமாலியா, ஐக்கிய அரபுச் சிற்றரசுகளின் (யுஏஇ) தூதரை வியாழக்கிழமை (நவம்பர் 19) நாட்டைவிட்டு வெளியேறும்படி உத்தரவிட்டுள்ளது.

சோமாலியாவிலிருந்து உடனடியாக வெளியேறிட யுஏஇ தூதருக்கு 72 மணி நேரம் காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது. அதேவேளையில் யுஏஇயின் தலைநகர் அபுதாபியில் இருந்து சோமாலியா அதன் தூதரைத் திரும்பப் பெற்றுக்கொண்டது.

ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் சோமாலியாவில் உள்ள மூன்று சுயாட்சி அதிகாரம் பெற்ற மாநிலங்களுக்கு வெளிப்படையாகப் பொருளியல், அரசியல் ஆதரவு வழங்கியதோடு அரசாங்கத்துக்கு எதிராகச் செயல்படும்படி ஊக்குவித்ததாக சோமாலியா குற்றஞ்சாட்டியது. அதனை ஓர் ‘ஆக்கிரமிப்பு’ என்று வர்ணித்தது சோமாலியா.

“சோமாலியாமீது படையெடுத்துள்ள ஐக்கிய அரபுச் சிற்றரசுகளுடன் ஒத்துழைக்கும் எவர்மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். நமது இறையாண்மை, பாதுகாப்பு, நிலம், ஒற்றுமை ஆகியவற்றுக்கு எதிராக ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் மேற்கொண்டுள்ள தாக்குதலுக்கு எதிராக அனைத்து சோமாலியர்களும் இணைந்து நாட்டைத் தற்காக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்,” என்று சோமாலியத் தகவல் துறை அமைச்சர் அப்டிஃபாடா காசிம் முகம்மது அரசாங்க ஊடகத்தில் அன்றையதினம் தெரிவித்தார்.

யுஏஇ மேற்கொண்ட செயல்பாடுகளின் விவரங்களை அமைச்சர் முழுமையாக வெளியிடவில்லை. ஐக்கிய அரபுச் சிற்றரசின் வெளியுறவு அமைச்சு எவ்விதப் பதில் கருத்தையும் தெரிவிக்கவில்லை.

கடந்த காலத்தில் அந்நாடு சோமாலியாவுக்கு பலவகையில் ஆதரவு நல்கிவந்துள்ளது. துறைமுகங்கள், வர்த்தக முதலீடுகள் ஆகியவற்றுடன் ராணுவப் பயிற்சிகளையும் வழங்கிவந்த யுஏஇ, சோமாலியாவின் உள்நாட்டு விவகாரங்களில் சம்பந்தப்படுவதாக இதற்குமுன்பும் அதன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து நிராகரித்து வந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்