டிரம்ப் வரிகளை எதிர்கொள்ள கைகோக்கும் தென்கொரியா, சீனா, ஜப்பான்

2 mins read
8b7ff6e4-2ce0-4758-be52-14f6d8d53b28
அமெரிக்காவுடன் வர்த்தக ரீதியாக இணைந்துள்ள நாடுகளின் இறக்குமதி மீது திரு டிரம்ப் வர்த்தக வரிகளை அறிவிக்கவுள்ளார்.  - படம்: ராய்ட்டர்ஸ்

தென்கொரியா, சீனா, ஜப்பான் ஆகியவை, ஐந்தாண்டுகளில் முதன்முதலாகத் தங்களுக்குள் பொருளியல் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளன.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் வரும் புதன்கிழமை அறிவிக்கவுள்ள இறக்குமதி வரிகளை உலகிலுள்ள பல்வேறு நாடுகள் எதிர்கொள்ளத் தயாராகும் நிலையில், வட்டாரப் பொருளியலுக்குக் கைகொடுக்கும் நோக்கத்துடன் இம்மூன்று நாடுகளும் இணைந்துள்ளன.

மூன்று நாடுகளுக்கும் இடையிலான தடையற்ற வர்த்தக உடன்பாடு தொடர்பாகக் கலந்துரையாட அணுக்கத்துடன் செயலாற்ற அந்நாடுகளின் வர்த்தக அமைச்சர்கள் இணங்கியுள்ளதாக சந்திப்புக்கு பிந்திய செய்தியாளர் அறிக்கை ஒன்று குறிப்பிடுகிறது.

‘ஆர்சிஇபி’ எனப்படும் வட்டார பரந்த பொருளியல் பங்காளித்துவ உடன்பாட்டின் செயல்பாட்டை வலுப்படுத்துவது முக்கியம் என்று தென்கொரிய வர்த்தக அமைச்சர் ஆ டுக் கியூன் குறிப்பிட்டார்.

அமெரிக்காவுடன் வர்த்தக ரீதியாக இணைந்துள்ள நாடுகளின் இறக்குமதி மீது திரு டிரம்ப் வர்த்தக வரிகளை அறிவிக்கவுள்ளார். அமெரிக்காவை அந்நாடுகள் ஏமாற்றி அதன் பொருளியலைத் தங்களுக்குச் சாதமாக்க நினைப்பதாகத் திரு டிரம்ப் இம்மாதத் தொடக்கத்தின்போது சமூக ஊடகத்தில் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவுக்குக் கிழக்காசிய நாடுகள் மோட்டார் வாகனப் பகுதிகளை ஏற்றுமதி செய்து வருகின்றன.

கடந்த வாரம் திரு டிரம்ப், கார் மீதும் வாகனப் பாகங்கள் மீதும் 25 விழுக்காடு இறக்குமதி வரிகளை அறிவித்தார்.

ஆசியாவிலுள்ள வாகன நிறுவனங்களை இந்த முடிவு பாதிக்கக்கூடும்.

மெக்சிக்கோவுக்கு அடுத்து தென்கொரியா, உலகின் ஆக அதிக அளவில் அமெரிக்காவுக்கு வாகனங்களை ஏற்றுமதி செய்வதாக உலகளாவிய தர மதிப்பீட்டு அமைப்பான ‘எஸ்&பி’ தகவல்கள் குறிப்பிடுகின்றன.

குறிப்புச் சொற்கள்