சோல்: தென்கொரியா, செயற்கை நுண்ணறிவுத் (ஏஐ) தொழில்நுட்பத்திலும் பகுதிமின்கடத்திகளிலும் செலவிடும் தொகையை அடுத்த ஆண்டுக்குள் இருமடங்காக உயர்த்தவிருக்கிறது.
நாட்டின் ராணுவத்தை, விவேகமான, உன்னதமான படையாக மாற்ற இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தப்போவதாகவும் அதிபர் லீ ஜே மியூங் உறுதியளித்தார்.
நாடாளுமன்றத்தில் திங்கட்கிழமை (நவம்பர் 2) வரவுசெலவுத் திட்ட அறிக்கையைத் தாக்கல் செய்து அவர் பேசினார்.
தரவு நிலையங்கள் முதல் இயந்திர மனிதக்கருவித் தொழில்நுட்பம் வரை சில்லு தயாரிப்பிற்கும் ஏஐ துறைக்கும் 21.3 டிரில்லியன் வோன் ($20.5 பில்லியன்) ஒதுக்கப்படும் என்று திரு லீ கூறினார்.
“எங்கள் பொருளியல் வளர்ச்சித் திறனை அதிகரிக்க ஏஐ மற்றும் எதிர்கால வளர்ச்சித் திட்டங்களில் நாங்கள் துணிச்சலான முதலீடுகளைச் செய்வோம். இந்தத் தொகை, 2026ஆம் ஆண்டின் தொகையைப் போன்று கிட்டத்தட்ட இரு மடங்கு,” என்று அவர் குறிப்பிட்டார்.
தற்காப்பு வரவுசெலவுத் திட்டத்தைப் பொறுத்தவரை, 2026ஆம் ஆண்டைவிடக் கிட்டத்தட்ட 8 விழுக்காடு அதிகரித்து 73.3 டிரில்லியன் வோனாக உயர்த்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களையும் கேஎஃப்-21 வகை போர் விமானங்களையும் பெறுவது நோக்கம்.
வடகொரியா அண்மையில் துல்லியமாக இலக்கைத் தாக்கும் புதிய டோர்ப்பிடோ கட்டமைப்பு, நடுத்தரத் தொலைவு அதிவேக ஏவுகணை உள்ளிட்ட பல ஆயுதங்களைச் சோதித்தது; இவை இரண்டும் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியதாக அது கூறியது.
2025ஆம் ஆண்டில், அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்குவதற்கு அமெரிக்காவுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தைத் தென்கொரியா அறிவித்தது. இந்த நீர்மூழ்கிக் கப்பல் திட்டத்தை, மோதலுக்கான ஆபத்தான முயற்சி என்று பியாங்யாங் கடுமையாக விமர்சித்தது.
ஒட்டுமொத்தமாக, 2027ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்டம் 821 டிரில்லியன் வோன் என அறிவிக்கப்பட்டது. இது முந்தைய நிதியாண்டைக் காட்டிலும் 12.8 விழுக்காடு அதிகம். அத்துடன் தென்கொரிய வரலாற்றிலேயே இதுவே ஆகப் பெரிய வரவுசெலவுத் திட்டம்.
அதிபர் லீ இப்போது இந்த வரவுசெலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும்; அவரது கட்சிக்குப் பெரும்பான்மை இருப்பதால் இது சாத்தியமான ஒன்றுதான் என்று நம்பப்படுகிறது.
