தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தென்கொரியா-ஜப்பான்-சீனா முத்தரப்புப் பேச்சு

2 mins read
b9bff8c9-e1ff-43ae-8be9-a0ef9c06c7b2
செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற சந்திப்பில் (இடமிருந்து) ஜப்பானிய வெளியுறவு மூத்த துணை அமைச்சர் டக்கஹிரோ ஃபனகோஷி, தென்கொரிய வெளியுறவு துணை அமைச்சர் சுங் பியுங் வொன், சீன வெளியுறவு விவகாரத் துணை அமைச்சர் நோங் ரோங். - படம்: ராய்ட்டர்ஸ்

சோல்: சீனா மற்றும் ஜப்பானின் மூத்த அரசதந்திரிகளுடனான சந்திப்பை தென்கொரியா செவ்வாய்க்கிழமை நடத்தியது.

ஜப்பானும் தென்கொரியாவும் தங்களுக்கு இடையிலும் அமெரிக்காவுடனும் ஒத்துழைப்பை வலுப்படுத்தி வருவதாகச் சீனா கவலைப்படும் வேளையில், அதனைத் தணிக்கும் நோக்கில் இச்சந்திப்பு இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது.

தென்கொரியா, ஜப்பான், சீனா என மூன்று நாட்டுத் தலைவர்களின் உச்சநிலைச் சந்திப்பு கடைசியாக 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற நிலையில், மீண்டும் அதனைத் தொடங்கவும் இந்தச் சந்திப்பு இலக்கு கொண்டுள்ளது.

கடந்த 1910 முதல் 1945 வரை தென்கொரியாவை ஜப்பான் ஆக்கிரமித்த காலத்திலிருந்து இரு நாடுகளுக்கும் இடையே நிலவிய பிரச்சினைகள் தொடர்பில், இருதரப்புச் சட்ட, அரசதந்திர, வணிக உறவுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன.

இந்நிலையில், தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோலும் ஜப்பானியப் பிரதமர் ஃபுமியோ கிஷிடோவும் உறவைப் புதுப்பிக்க முயற்சி எடுத்து வருகின்றனர்.

அவ்வகையில், சென்ற ஆகஸ்ட் மாதம் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பில் அவர்கள் பங்கேற்றனர்.

அப்போது அம்மூன்று நாடுகளும் தற்காப்பு, பொருளியல் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த உறுதிபூண்டனர்.

இவ்வேளையில், ஜப்பான், தென்கொரியாவுடன் ஒத்துழைக்க சீனா ஆர்வம் காட்டி வருகிறது என்றும் அதன் தொடர்பில் சந்திப்புகளுக்கு ஏற்பாடு செய்து வருகிறது என்றும் தென்கொரிய அரசு உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அதேபோல, சீனாவுடன் மோதல் போக்கைத் தவிர்த்து, பாதுகாப்பு தொடர்பில் நிலைத்த உறவைப் பேண ஜப்பானும் தென்கொரியாவும் ஆர்வம் காட்டுவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இவ்வாண்டு முத்தரப்புச் சந்திப்புகளை நடத்தும் நாடாகத் தென்கொரியா திகழ்கிறது. வரும் டிசம்பர் மாதம் அம்மூன்று நாட்டுத் தலைவர்களின் உச்சநிலைச் சந்திப்பை நடத்தவும் அது முன்மொழிந்துள்ளது.

தென்கொரிய வெளியுறவு துணை அமைச்சர் சுங் பியுங் வொன், ஜப்பானிய வெளியுறவு மூத்த துணை அமைச்சர் டக்கஹிரோ ஃபனகோஷி, சீன வெளியுறவு விவகாரத் துணை அமைச்சர் நோங் ரோங் ஆகியோர் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற சந்திப்பில் பங்கேற்றனர்.

குறிப்புச் சொற்கள்