தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சீனாவுடன் உறவை வழக்கநிலைக்குக் கொண்டுவர விரும்புகிறது தென்கொரியா

2 mins read
fb291bec-44d9-409e-8672-1656897d49c7
தென்கொரியாவும் சீனாவும் பொருளியல், விநியோக நடவடிக்கைகளில் கணிசமான முன்னேற்றம் காண்பதற்கு இணைந்து பணியாற்ற இணங்கியுள்ளன. - படம்: ராய்ட்டர்ஸ்

சோல்: தென்கொரியா சீனாவுடன் உறவை வழக்கநிலைக்குக் கொண்டுவர விரும்புகிறது.

தென்கொரியாவின் சிறப்புத் தூதர், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யியிடம் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 24) அவ்வாறு கூறினார்.

அண்மை ஆண்டுகளில் இரு தரப்பு உறவு கசப்படைந்திருந்தது. இப்போது பொருளியல் ஒத்துழைப்பை மேம்படுத்த இரு தரப்பும் இணங்கியதாகத் தென்கொரிய வெளியுறவு அமைச்சு திங்கட்கிழமை (ஆகஸ்ட் 25) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

தென்கொரிய அதிபர் லீ ஜே மியுங் வா‌ஷிங்டன் சென்றுள்ள வேளையில், முன்னாள் நாடாளுமன்ற நாயகர் பார்க் பியோங்-சியுக் தலைமையில் சிறப்புப் பேராளர் குழுவொன்றை அவர் சீனாவுக்கு அனுப்பிவைத்துள்ளார்.

திரு லீ திங்கட்கிழமை (ஆகஸ்ட் 25) வா‌ஷிங்டன் சென்றுசேர்ந்திருக்கிறார்.

சீன அதிபர் ஸி ஜின்பிங்கிற்குத் திரு லீ எழுதிய கடிதத்தைத் திரு பார்க் திரு வாங்கிடம் கொடுத்தார்.

அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள ஏப்பெக் கூட்டத்தில் கலந்துகொள்ள வருமாறும் திரு பார்க் சீனாவுக்கு அழைப்பு விடுத்தார்.

இரு நாடுகளுக்கும் இடையில் உறவை வலுப்படுத்தத் தென்கொரியாவின் புதிய அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளைத் திரு வாங் பாராட்டினார்.

இரு தரப்பும் பொருளியல், விநியோக நடவடிக்கைகளில் கணிசமான முன்னேற்றம் காண்பதற்கு இணைந்து பணியாற்ற இணங்கியுள்ளன.

தென்கொரியாவுடன் நிலைத்தன்மையைத் தொடர்ந்து கட்டிக்காப்பதே சீனாவின் கொள்கை என்றார் திரு வாங். இரு தரப்பு உறவை முன்னெடுத்துச் செல்ல, இரு தரப்பும் தேசிய உணர்வுகளை மேம்படுத்த வேண்டும் என்றும் நெருடல்களை முறையாக நிர்வகிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

தென்கொரியா அமெரிக்க ஏவுகணைத் தற்காப்புக் கட்டமைப்பை 2017ஆம் ஆண்டு நிறுவியது. பெய்ஜிங் அதனை எதிர்த்தது. அதனால் இரு நாடுகளுக்கும் இடையில் சர்ச்சை மூண்டது. அதன் பின்னர் அரசதந்திர உறவு சீரடைந்தது.

ஆனால் 2023ல் தென்கொரியாவின் முன்னாள் அதிபர் யூன் சுக் இயோல் பெய்ஜிங்கைக் கடுமையாகக் குறைகூறியதைத் தொடர்ந்து இரு தரப்பு உறவு மீண்டும் பாதிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்