தீபாவளிக்கென மலேசிய போக்குவரத்துத் துறையின் சிறப்பு ஏற்பாடுகள்

மலேசிய அரசாங்கத்தின் விழாக்கால அறிவிப்புகள்

தீபாவளிக்கென மலேசிய போக்குவரத்துத் துறையின் சிறப்பு ஏற்பாடுகள்

பெருவிரைவுச் சாலைகளில் 50% வரை கட்டணக் கழிவு: பினாங்கில் இருவழி படகுச் சேவை தீபாவளியன்று இலவசம்
1 of 2
படம்: மலேசியப் போக்குவரத்து ஆணையம்
படம்: த ஸ்டார் / ஆஷியா நியூஸ் நெட்வொர்க்

05 Nov 2026 - 7:25 pm

2 mins read

பெட்டாலிங் ஜெயா: தீபாவளியை முன்னிட்டு மலேசியாவின் முக்கியப் பெருவிரைவுச் சாலைகளில் போக்குவரத்து அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போக்குவரத்து எண்ணிக்கை வியாழக்கிழமை (நவம்பர் 5) முதல் படிப்படியாக உயரும் எனவும் விழாக் காலத்தில் மொத்தமாக 3.28 மில்லியன் வாகனங்கள் அச்சாலைகளைப் பயன்படுத்தும் வாய்ப்புள்ளது என்றும் மலேசிய பெருவிரைவுச் சாலை ஆணையத்தின் (எல்எல்எம்) தலைமை இயக்குநர் முகம்மது ஹட்ஸ்மிர் யூசோஃப் அன்றைய தினம் தெரிவித்தார்.

நாட்டின் கிழக்குக் கரை, வடக்கு, தெற்கு வட்டாரங்களை நோக்கி அதிகப் போக்குவரத்து இயங்கும் என்று அவர் தெரிவித்தார்.

‘பிளஸ்’ பெருவிரைவுச் சாலைகளின் வழித்தடங்கள், 2.24 மில்லியன் வானங்களைப் பதிவுசெய்யும். அவற்றைத் தொடர்ந்து டுத்தா-உலு கெலாங் விரைவுச்சாலை 288,000 வாகனங்களையும் கோலாலம்பூர்-கராக் விரைவுச் சாலை 190,000 வாகனங்களையும் வெஸ்ட்கோஸ்ட் விரைவுச் சாலை 168,000 வாகனங்களையும் பதிவுசெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் அறிக்கையொன்றில் வெளியிட்டார்.

தீபாவளிக் கொண்டாட்டங்களின் அங்கமாக விழாவுக்கு முந்தைய வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை ஆகிய இரு நாள்களில் நாட்டின் நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் வாகனவோட்டிகளுக்கு 50 விழுக்காடு சிறப்புக் கழிவு சுங்கச் சாவடி நுழைவாயில்களில் வழங்கப்படும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் அலெக்சாண்டர் நன்டா லிங்கி வியாழக்கிழமை தெரிவித்தார்.

அந்தக் கழிவுகள் வெள்ளிக்கிழமை அதிகாலை 12.00 மணிக்குத் தொடங்கி, சனிக்கிழமை இரவு 11.59 மணிவரையில் வழங்கப்படும் என்று அவர் விவரித்தார்.

கூட்டரசு, நெடுஞ்சாலைகளுக்கென வழங்கும் இழப்பீட்டுச் சலுகைகளின்படி, அக்கழிவுகளின் மொத்த மதிப்பு மலேசிய ரிங்கிட் 20.11 மில்லியன் (S$ 6.3 மில்லியன்) இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அந்த மதிப்பீடு விடுமுறைக்குப் பிறகு செய்யப்படும் போக்குவரத்து அளவீடுகளின் அடிப்படை எண்ணிக்கையைப் பொருத்தது எனவும் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் சிங்கப்பூருடனான இரு நிலவழி சோதனைச் சாவடிகளிலும் வழக்கமான கட்டணங்கள் வசூலிக்கப்படும் எனவும் நினைவூட்டப்பட்டது.

இதனிடையே பினாங்கு துறைமுக ஆணையமும் (பிபிசி) பினாங்கு துறைமுகம் ‘சென்டிரியான் பெர்ஹாட்’ அமைப்பும் (பிபிஎஸ்பி) கூட்டாக இணைந்து தீபாவளியன்று மலேசியக் குடிமக்களுக்கு இலவச இருவழிப் படகுப் பயணத்தை வழங்குவதாக வியாழக்கிழமை அறிவித்தன.

ஆணையத்தின் தலைவர் இயோ சூன் ஹின், பட்டர்வொர்த் பகுதியில் இருந்து பினாங்குத் தீவின் ஜார்ஜ்டவுன் வரை இருவழிகளிலும் சென்றுவர அச்சலுகை வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

படகுகளுக்கான ஆக அண்மையப் பயண நேரங்களை இரு அமைப்புகளின் இணையத் தளங்களிலும் சமூக ஊடகங்களிலும் சரிவரப் பார்த்து முன்னதாகத் திட்டமிடும்படி பொதுமக்களை அவர் கேட்டுக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்