கொழும்பு: இலங்கையின் புதிய அதிபரான அனுர குமார திசாநாயக்க, வரும் திங்கட்கிழமை (பிப்ரவரி 17) தனது முதலாவது முழு ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் (பட்ஜெட்) அரசாங்கத்தின் வருவாய் மற்றும் கொள்கை இலக்குகளைக் கோடிட்டுக் காட்டுவார். மேலும் நிதி நெருக்கடியிலிருந்து நாட்டின் மீட்சியை நீட்டிக்கவும் அனைத்துலக பணநிதியத்தின் (ஐஎம்எஃப்) $2.9 பில்லியன் உதவித் திட்டத்தில் காணப்பட்ட அதன் இணக்கத்தைக் குறிக்கவும் முயல்வார்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, டாலர் கையிருப்பில் ஏற்பட்ட கடுமையான சரிவு, இலங்கையை நெருக்கடியில் ஆழ்த்தியது. இலங்கையில் பணவீக்கம் உயர்ந்தது. அதன் நாணய மதிப்பு குறைந்தது. 25 பில்லியன் டாலர் வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தும் இக்கட்டான சூழ்நிலைக்கு அந்நாடு தள்ளப்பட்டது.
மார்ச் 2023ல், அனைத்துலக பணநிதியத்திலிருந்து 2.9 பில்லியன் டாலர் அவசர நிதியை நிறுத்தியதிலிருந்து, இலங்கை எதிர்பார்த்ததைவிட வேகமாக மீட்சியைப் பதிவு செய்துள்ளது.
இப்போது அங்கு பணவீக்கம் தணிந்துள்ளது; மத்திய வங்கி வட்டி விகிதங்களை நெருக்கடிக்கு முந்தைய நிலைக்குக் குறைத்துள்ளது. மேலும் கடன் மறுசீரமைப்பு கடந்த டிசம்பரில் நிறைவடைந்தது.
நிதியமைச்சராகவும் இருக்கும் திசாநாயக்க, தேர்தலுக்கு முந்தைய வாக்குறுதிகளுக்கு இணங்க, வரிகளைக் குறைத்தல், நலத்திட்டங்களை அதிகரித்தல், உள்ளூர் தொழில்களை ஆதரிப்பதன் மூலம் பொருளாதார மீட்சியை வலுப்படுத்த நம்பிக்கை கொண்டுள்ளார்.
ஆனால், ஐஎம்எஃப் நிர்ணயித்த அளவுகோலுக்குள் நிலைப்படுவதற்கான சவாலை அவர் எதிர்கொள்கிறார். அதில் ஒன்று மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.2% பற்றாக்குறை மட்டுமே இருக்க வேண்டும் என்ற இலக்கு, 2025ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வருவாயை 15.1% உயர்த்துவது ஆகியவை அடங்கும். இவை தடுத்து நிறுத்தி வைக்கப்பட்ட அடுத்த தவணை உதவித் தொகையான சுமார் $333 மில்லியனைப் பெற உதவும்.
பொது வருவாயை அதிகரிக்க அதிபர் புதிய வரிகளை விதிக்க வேண்டியிருக்கும் என்றும் செலவினங்களை மறுசீரமைக்க வேண்டியிருக்கும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
2023ஆம் ஆண்டில் 2.3% சுருங்கியிருந்த இலங்கையின் பொருளாதாரம், 2024ஆம் ஆண்டில் 5% வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அண்மைய மத்திய வங்கி தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டு இலங்கையின் பொருளாதாரம் 3.5% வளர்ச்சியடையும் என்று உலக வங்கி மதிப்பிடுகிறது.

