கத்திக்குத்துத் தாக்குதல் தீவிரமாக விசாரிக்கப்படும்: தைவான் அதிபர்

2 mins read
26a1c0ab-d683-49a4-adea-261929e5347e
கத்திக்குத்துத் தாக்குதல் நிகழ்ந்ததை அடுத்து தைவானில் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது. - படம்: இபிஏ

தைப்பே: தைவான் தலைநகர் தைப்பேயில் நிகழ்ந்த கத்திக்குத்துத் தாக்குதல் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்படும் என்று தைவான் அதிபர் லாய் சிங்-டே கூறியுள்ளார்.

தைப்பேயில் உள்ள முக்கிய ரயில் நிலையத்தில் புகைக் குண்டுகளைப் போட்ட 27 வயது சந்தேக நபர் திடீரென அங்கிருந்தவர்களைக் கத்தியால் தாக்கத் தொடங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சம்பவம் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 19) நேர்ந்தது.

ஆடவரின் பெயர் சாங் வென் என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

முக்கிய ரயில் நிலையம், நிலத்தடி கடைத்தொகுதி வட்டாரம், மற்றொரு ரயில் நிலையம் ஆகியவற்றில் ஆடவர் நடத்திய கத்திக்குத்துத் தாக்குதலில் நால்வர் பலியாயினர், 11 பேர் காயமுற்றனர்.

கத்திக்குத்துத் தாக்குதல் நடத்திய நபர் ஏற்கெனவே ராணுவச் சேவைக்குச் செல்லாமல் இருந்ததற்காகத் தேடப்பட்டவர். சந்தேக நபர் இறுதியில் உயிரை மாய்த்துக்கொண்டதாகத் தைப்பே மேயர் கூறினார்.

அதிகாரிகள் அது அவசரத்தில் எடுத்த முடிவு என்றபோதும் ஆடவர் உயிரை மாய்த்துக்கொண்டதற்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை என்றனர்.

கத்திக்குத்துத் தாக்குதலில் மாண்டோருக்கு மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
கத்திக்குத்துத் தாக்குதலில் மாண்டோருக்கு மக்கள் அஞ்சலி செலுத்தினர். - படம்: இபிஏ

இந்நிலையில், தாக்குதலில் காயமடைந்தோரை மருத்துவமனையில் சென்று சந்தித்த தைவான் அதிபர் லாய் தமது அனுதாபங்களைத் தெரிவித்துக்கொண்டார்.

“பரிதாபமாக உயிரிழந்தோருக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன். அவர்களின் குடும்பத்துக்கு எனது அனுதாபங்கள்,” என்றார் அவர்.

தாக்குதல் குறித்து முழுமையான, தீவிரமான விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டுள்ளதாகச் சொன்ன திரு லாய், பொதுமக்களுக்கு முழு உண்மையை நிச்சயம் முன்வைக்கப்போவதாக உறுதிகூறினார்.

அதிகாரிகளும் முன்னெச்சரிக்கையுடன் நடப்பது அவசியம் என்பதைத் திரு லாய் வலியுறுத்தினார். பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொள்ள அதிகாரிகள் நன்கு பயிற்சி பெற்றிருக்கவேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையே, தாக்குதல் நடத்திய ஆடவர் தன்னிச்சையாகச் செயல்பட்டதாகக் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆடவரின் நோக்கம் குறித்த விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்