மணிலா: மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றத்தால் அனைத்துலக எண்ணெய் விநியோகம் தடைபடக்கூடும் என்பதை முன்னிட்டு பிலிப்பீன்ஸ் அதிபர் ஃபெர்டினண்ட் மார்கோஸ் ஜூனியர் தேசிய அளவில் எரிசக்தி நெருக்கடி நிலையை அறிவித்துள்ளார்.
அமெரிக்கா, இஸ்ரேல் ஆகியவற்றுக்கும் ஈரானுக்கும் இடையே நிலவும் பூசலால் அனைத்துலக எரிசக்திச் சந்தையில் தேவையில்லாத விநியோகத் தடை ஏற்படுகிறது என்றும் பிலிப்பீன்சின் எரிசக்திப் பாதுகாப்புக்கு அது அச்சுறுத்தலாக இருக்கிறது என்றும் திரு மார்கோஸ் கூறினார்.
எண்ணெய் விலை அதிகரிப்பைச் சமாளிப்பதற்காக மட்டுமல்லாது எதிர்காலத்தில் அதிகரிக்கக்கூடிய விலைவாசிக்கும் நாட்டைத் தயார்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.
பிலிப்பீன்ஸ் அனைத்துவித எரிபொருள் தேவைகளைப் பூர்த்திசெய்வதற்குமான எண்ணெய்யை இறக்குமதி செய்வதால் ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்களுக்கு நீடிக்கும் தடை பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்றார் திரு மார்கோஸ்.
இந்த நெருக்கடி நிலை அறிவிப்பு ஓராண்டுக்கு நீடிக்கும் என்று கூறப்பட்டது.

