பேங்காக்: ஈரான் போர் அரிசியையும் விட்டுவைக்கவில்லை. போர் காரணமாக எழுந்த சூழ்நிலைகள் தாய்லாந்து அரிசி விலையைக் கடுமையாக ஏற்றிவிட்டுள்ளன.
ஆசிய வட்டாரத்தில் தாய்லாந்தின் வெள்ளை அரிசி முக்கியப் பங்கு வகிக்கிறது. ஏப்ரல் 8ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் அந்த அரிசியின் விலை 10 விழுக்காடு உயர்ந்து, டன் ஒன்றுக்கு US$423 ஆனது.
இது, கடந்த 2023 ஆகஸ்ட்டுக்குப் பிறகு ஏற்பட்ட கடுமையான விலை உயர்வு ஆகும்.
ஈரான் போர் காரணமாக எரிபொருள் மற்றும் உரங்களின் விலை உயர்ந்துவிட்டதால், அறுவடை செய்த அரிசியை அதிக விலைக்கு விநியோகம் செய்ய வேண்டி இருக்கும். அந்தச் சவாலை மேற்கொள்வதற்குப் பதில், நெல் பயிர்களை சாகுபடி செய்வதைப் பல தாய்லாந்து விவசாயிகள் கைவிட்டுவிட்டனர். அரிசி விலை உயர்வுக்கு அது முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.
அதிகரித்துவரும் செலவுகளை ஈடுகட்ட தங்களின் லாபம் போதுமானதாக இல்லாததால் அவர்கள் சாகுபடியை நிறுத்தி வைத்துள்ளதாக சிங்கப்பூரில் உள்ள ராபோபேங்க் நிறுவனத்தின் சரக்குப் பிரிவு மூத்த பகுப்பாய்வாளர் ஆஸ்கர் ஜக்ரா கூறினார்.
தாய்லாந்தில் நீண்டகாலமாக வறட்சி நீடித்து வருவதும் நிலைமையை மோசமாக்கி உள்ளது. அதனால், விளைச்சல் கணிசமாகக் குறைந்து, அறுவடை செய்யப்படும் பயிர்களின் விநியோகம் கடினமாகிவிட்டது என்றார் அவர்.
வலுவடைந்துள்ள தாய்லாந்து நாணயம், மத்திய கிழக்குப் போர் ஆகியன காரணமாக சரக்கு மற்றும் காப்பீட்டுச் செலவுகள் அதிகரித்ததும் அரிசி விலை உயர்வுக்கான காரணங்களாக அமைந்துவிட்டன என்று திரு ஜாக்ரா கூறினார்.
உலகின் மூன்றாவது பெரிய வேளாண் ஏற்றுமதி நாடு தாய்லாந்து என்கிறது அமெரிக்க வேளாண்மைத் துறையின் தரவு.
தொடர்புடைய செய்திகள்
தாய்லாந்து விவசாயிகள் தற்போது பருவம் பிந்திய பயிர்களை அறுவடை செய்து வருவதுடன், மே மாதம் ஆரம்பமாகவுள்ள முக்கியப் பயிர் சாகுபடிக்கும் தயாராகி வருகின்றனர்.
போர் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் சூசமாகக் கூறியிருப்பது, சந்தைகளுக்குச் சற்று நிம்மதியைக் கொடுத்தாலும் ஹோர்முஸ் நீரிணை வழியாக நடைபெறும் எரிசக்திப் போக்குவரத்து இயல்புநிலைக்குத் திரும்பச் சிறிது காலம் பிடிக்கும் என்று கருதப்படுகிறது.
அதனால், விவசாயத்துக்கான செலவுகள் அதிகரித்த நிலையிலேயே நீடிக்கும் என்றும் அரிசி உற்பத்தியை அது பாதிக்கக்கூடும் என்றும் தோன்றுகிறது.

