தலைமைப் பணியாளர் அதிகாரியாக ஸ்டீஃபன் மில்லர் நியமனம்: டிரம்ப்

கடுமையான குடியேற்ற கொள்கையை வகுத்த மில்லரை எதிர்க்கும் ஜனநாயகக் கட்சி

தலைமைப் பணியாளர் அதிகாரியாக ஸ்டீஃபன் மில்லர் நியமனம்: டிரம்ப்

படம்: ஏஎஃப்பி

07 Nov 2026 - 11:57 am

2 mins read

வா‌ஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், கடுமையான குடிநுழைவுக் கொள்கையை வகுத்த ஸ்டீஃவன் மில்லரைத் தமது தலைமைப் பணியாளர் அதிகாரியாக நியமித்துள்ளார்.

அமெரிக்காவில் நடந்துமுடிந்த இடைக்காலத் தேர்தலில் ஜனநாயகக் கட்சியிடம் குடியரசுக் கட்சி தோல்வியுற்றதை அடுத்து திரு டிரம்ப் தமது முடிவை அறிவித்தார்.

இதுவரைப் பதவி வகித்த திருவாட்டி சுசி வைல்சிற்குப் பதிலாக டிரம்ப்பின் தீவிரப் பற்றாளரான 41 வயது திரு மில்லர் தலைமைப் பணியாளர் அதிகாரியாகப் பதவியேற்கிறார்.

அதைக் கடுமையாகச் சாடிய ஜனநாயகக் கட்சியினர் மில்லருக்கு எதிராக இறுதிவரை போராடவிருப்பதாக உறுதிகூறினர்.

அமெரிக்காவின் குடியேற்ற, சுங்க அமலாக்கத் துறை அதிகாரிகளின் வன்முறைக்குப் பின்னால் மில்லர் இருந்ததாக அக்கட்சியினர் கருதுகின்றனர். அதிகாரிகளின் வன்முறையால் இரண்டு அமெரிக்கர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

இந்நிலையில், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய திரு டிரம்ப், “மாற்றத்தை ஏற்படுத்த விரும்புகிறேன். வாழ்க்கையில் சில நேரங்களில் சில முடிவுகளை எடுக்கவேண்டும்,” என்று கூறினார்.

இடைக்காலத் தேர்தலுக்கு முன்புவரை திருவாட்டி வைல்சிற்குப் பதிலாக வேறொருவரை நியமிப்பதற்கு எந்தவிதச் சாத்தியமும் இல்லை என்று உறுதிகூறிய திரு டிரம்ப், தற்போது எடுத்திருக்கும் முடிவால் பலரும் அதிர்ச்சியுற்றனர்.

திருவாட்டி வைல்ஸ் பதவியிலிருந்து இம்மாதம் 5ஆம் தேதி விலகியதாக வெள்ளை மாளிகை அதிகாரி கூறியதாக ஏஎஃப்பி செய்தி நிறுவனம் தெரிவித்தது.

திரு டிரம்ப்பின் இரண்டாம் தவணைக் காலத்தில் கொள்கைக்கான உதவித் தலைமைப் பணியாளர் அதிகாரியாகவும் உள்துறைப் பாதுகாப்பு ஆலோசகராகவும் திரு மில்லர் செயல்பட்டார்.

கள்ளக் குடியேறிகளை ஒட்டுமொத்தமாக நாட்டைவிட்டு வெளியேற்றும் திட்டத்தையும் திரு மில்லர் முன்வைத்தவர்.

ஆனால், இவ்வாண்டு ஜனவரி மாதம் மினியபலிசில் இரண்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் குடிநுழைவு அதிகாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து திரு மில்லரின் திட்டம் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

“ஸ்டீஃபன் மில்லர், காட்டுமிராண்டித்தனமான, மனிதநேயமற்ற கொள்கைகளை உருவாக்கியவர். டிரம்ப் இதைவிட மோசமான முடிவை எடுத்திருக்க முடியாது,” என்று ஜனநாயகக் கட்சியின் திரு சக் ‌ஷூமர் எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்
அதிகாரிவன்முறைஅமெரிக்காகுடியேற்றம்