தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பிலிப்பீன்சில் மீண்டும் புயல்: 400,000 பேர் வெளியேற்றம், மூவர் மரணம்

2 mins read
788c9b48-bdd1-4251-960d-da54c021fc38
மணிலாவின் தென் பகுதியில் மீனவர்கள் படகுகளைப் பாதுகாப்பாக மரக்கட்டைகளைக் கொண்டு கட்டிவைக்கின்றனர். - படம்: இபிஏ.

மணிலா: பிலிப்பீன்சில் வீசிய கடும் புயல்காற்றில் சிக்கி மூவர் மாண்டனர். 400,000 பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டனர். ‘ரகாசா’ சூறாவளி தாக்கிய ஒருசில நாள்களில் ‘பூவாலோய்’ எனும் புயல் பிலிப்பீன்சைப் பதம் பார்த்தது.

சுவர்கள் இடிந்து விழுந்ததாகவும் மரங்கள் வேரோடு சாய்ந்ததாகவும் தலைநகர் மணிலாவுக்குத் தெற்கே உள்ள பீக்கோல் வட்டாரத்தின் குடிமைத் தற்காப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். ‘பூவாலோய்’ புயல்காற்று மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் வீசுவதாகக் கூறப்பட்டது.

மாஸ்பேட் மாநிலத்தின் தேவாலயமொன்று சேதமடைந்தது. அதன் கூரை, கதவு, சன்னல்கள் முதலியவை நொறுங்கியதாகக் குடியிருப்பாளர் ஒருவர் சொன்னார். தேவாலயத்தில் இருந்த சிலர் இருக்கைகளுக்குக் கீழே தஞ்சம் புகுந்தனர். பிள்ளைகள் சிலருக்குச் சிறு காயங்கள் ஏற்பட்டன.

புயல்காற்று கட்டுக்கடங்காமல் வீசியதில் பல வீடுகள் இடிந்து விழுந்தன. கூரைகள் பறந்தன. அதனால் ஏராளமானோர் வெளியேறவேண்டிய நிலை உண்டானதாகக் குடியிருப்பாளர் ஒருவர் கூறினார். சாலைகள் போக்குவரத்துக்கு மூடப்பட்டதாகக் கூறப்பட்டது.

“பல சாலைகள் பயன்படுத்தமுடியாத நிலையில் இருப்பதால் பெரிய மரங்களையும் மின்கம்பங்களையும் நாங்கள் அகற்றுகிறோம்,” என்று மீட்புப் பணியாளர் ஒருவர் சொன்னார்.

“பலத்த மழை பெய்தது. ஆனால் அதைவிட வேகமாக காற்று வீசியது,” என்றார் அவர்.

பிலிப்பீன்சின் மத்தியப் பகுதியில் உள்ள விசாயாஸ் தீவில் இடுப்பளவு வெள்ளம். அங்கு படகுகளின் மூலம் மக்கள் செல்வதைச் சமூக ஊடகங்களில் வெளியான காணொளிகளில் பார்க்க முடிந்தது.

வாரத் தொடக்கத்தில் வீசிய ரகாசா சூறாவளியில் 9 பேர் மாண்டனர்.

பிலிப்பீன்சை ஆண்டுதோறும் சராசரியாக 20 புயல்காற்றும் சூறாவளிகளும் தாக்குகின்றன. பேரழிவு ஏற்படக்கூடிய பகுதிகளில் மில்லியன் கணக்கானோர் வசிக்கும் சூழல் அங்கு நிலவுகிறது.

குறிப்புச் சொற்கள்