ஜகார்த்தாவில் வெடிப்பு: ராணுவ வீரர்கள் காயம்

இந்தோனீசியத் தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள தேசிய நினைவகப் பூங்காவில் இன்று காலை வெடிப்பு ஏற்பட்டதாக அந்நாட்டு போலிசார் தெரிவித்தனர்.

புகைக் கையெறி குண்டு காரணமாக வெடிப்பு ஏற்பட்டதாக ஆரம்பக்கட்ட விசாரணை காட்டுவதாக ஜகார்த்தா போலிஸ் படைத் தலைவர் காடோட் எடி பிராமோனோ கூறினார்.

வெடிப்பு காரணமாக ராணுவ வீரர்கள் இருவர் காயமுற்றனர். ஒருவருக்கு கைகளிலும் இன்னொருவருக்கு காலிலும் காயங்கள் ஏற்பட்டன. அவர்கள் இருவரும் ஜகார்த்தாவில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.  அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அந்த இரு ராணுவ வீரர்களும் இன்று காலை வழக்கம்போல பூங்காவில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது அந்தக் கையெறி குண்டைப் பார்த்ததாக  ஜகார்த்தா ராணுவப் படைத் தலைவர் ஏக்கோ மார்ஜியோனா தெரிவித்தார்.

அவர்களில் ஒருவர் தரையில் கிடந்த கையெறி  குண்டை தமது கையில் எடுத்தபோது அது வெடித்ததாக அவர் கூறினார்.

“கையெறி குண்டைக் கையில் வைத்திருந்த ராணுவ வீரரின் இடது கை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போது இரு வீரர்களும் சுயநினைவுடன் இருந்தனர்,” என்று படைத் தலைவர் மார்ஜியானோ நடந்ததைப் பற்றி செய்தியாளர்களிடம் கூறினார்.

அந்தக் கையெறி குண்டு பூங்காவில் கிடந்ததற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடத்தப்படுகிறது.
பேரணிகள் நடக்கும்போது கூட்டத்தைக் கலைக்க போலிசார் புகைக் கையெறி குண்டுகளைப் பயன்படுத்துவது வழக்கம் என்று போலிஸ் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார். 

நேற்று தேசிய நினைவகப் பூங்காவில் முஸ்லிம் அமைப்புகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அமைதிப் பேரணி நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இன்றைய வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்த பூங்கா அதிபர் மாளிகைக்கு அருகில் உள்ளது. சம்பவம் நிகழ்ந்தபோது அதிபர் ஜோக்கோ விடோடோ மாளிகையில் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity