சுடச் சுடச் செய்திகள்

உலகம் முழுவதும் பரவும் விசித்திர ‘வைரஸ்’; நிபுணர்கள் எச்சரிக்கை

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவும் விசித்திர காய்ச்சலைத் தடுத்து நிறுத்த உலக நாடுகள் பல்வேறு அவசர நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில் அதிகாரபூர்வ புள்ளிவிவரங்களைக் காட்டிலும் அந்த நோய் பெருமளவில் பரவியிருக்கலாம் என்று உலக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

அடுத்த வாரம் சீனப் புத்தாண்டையொட்டி சீனாவில் மக்கள் நடமாட்டம் அதிகரிக்கும் என்பதால் அந்த நோய் மேலும் பரவலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

விடுமுறை காரணமாக சீன மக்கள் வெளிநாடுகளுக்கும் பயணம் மேற்கொண்டு திரும்புவார்கள்.  இதனால் மற்ற நாடுகளிலும் விசித்திர வைரஸ் பரவக்கூடிய வாய்ப்பு அதிகம் என்று அறிவியல் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

‘கொரோனா வைரஸ்’ என்று சந்தேகிக்கப்படும் புதிய வைரஸ் சில ஆண்டுகளுக்கு முன்பு பரவிய சார்ஸ் வைரஸ் போன்று நிமோனியா காய்ச்சலை ஏற்படுத்தி வருகிறது.

உலகம் முழுவதும் புதிய வைரஸ் சம்பவங்கள் ஏற்பட்டுள்ளதை 45 சோதனைக் கூடங்கள் உறுதி செய்துள்ளன. ஆனால் பிரிட்டிஷ் நிபுணர்கள் 1,700 பேர் வரை பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று மதிப்பீடு செய்துள்ளனர்.

கடந்த மாதம் வூஹான் நகரில் புதிய வைரஸ் காய்ச்சலுக்கு இருவர் பலியாகிவிட்டனர்.

இந்த நிலையில் மேலும் நால்வர் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய வூஹான் நகர சுகாதார அதிகாரிகள், நால்வரின் உடல்நிலையும் சீராக இருப்பதாகத் தெரிவித்தனர்.

வூஹானில் வசிக்கும் மக்கள் அல்லது அந்த நகரத்துக்குச் சென்று திரும்பியவர்களில் குறைந்தது 50 பேருக்கு நோய் தொற்றியிருப்பதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் இந்த எண்ணிக்கை உண்மை நிலவரத்தை பிரதிபலிக்கவில்லை என்று நம்பப்படுகிறது.

சிங்கப்பூரிலும் வூஹான் நகருக்குச் சென்று திரும்பிய இருவருக்கு நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டுள்ளது என்று வெள்ளிக்கிழமை அன்று சுகாதார அமைச்சு தெரிவித்தது. ஒருவர் சீன நாட்டைச் சேர்ந்த 64 வயது முதியவர், மற்றொருவர் 61 வயது சிங்கப்பூர் மாது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இருவரின் உடல்நிலை சீராக இருந்து வருகிறது.

இருவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று அமைச்சு கூறியது. இதற்கு முன்பு வூஹான் நகருக்குச் சென்று சிங்கப்பூர் திரும்பிய மூவர் விசித்திர காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது. ஆனால் பின்னர் அது இல்லை என்று உறுதி செய்யப்பட்டது.

இதற்கிடையே சீனாவிலிருந்து வரும் பயணிகளிடம் சுகாதாரப் பரிசோதனை நடத்த அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

இதையொட்டி சீனாவுடன் நேரடியாக இணைக்கும் சான் ஃபிரான்சிஸ்கோ, நியூயார்க் மற்றும் லாஸ் ஏஞ்சலஸ் விமான நிலையங்களில் சோதனைகள் தொடங்கப்பட்டுள்ளன.

#தமிழ்முரசு #வூஹான் #வைரஸ் #காய்ச்சல்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon