கோலாலம்பூர்: மலேசியாவில் தற்போது நிலவிவரும் வெப்ப அலை ஜூன் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக தேசிய வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.
அதன் பிறகு செப்டம்பர் வரை சராசரி அளவுக்கும் குறைவாக மழை பெய்யும் என முன்னுரைக்கப்படுகிறது.
வறண்ட வானிலை காரணமாக ஜூன் முதல் செப்டம்பர் வரை புகைமூட்டம் திரும்பக்கூடும் என்று தேசிய வளங்கள், சுற்றுப்புற, பருவநிலை மாற்ற அமைச்சர் நிக் நஸ்மி நிக் அகமது கூறினார்.
"வெப்பம் அதிகரித்துள்ளதால் வனப்பகுதியில் கட்டுக்கடங்காத தீயினால் புகைமூட்டம் திரும்புவதற்கான சாத்தியம் அதிகம்," என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் அவர் சொன்னார்.
மலேசியாவில் தொடர்ந்து மூன்று நாள்களாக சராசரி அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியசைத் தாண்டினால் வெப்ப அலை எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
கடந்த ஏப்ரலில் பல்வேறு மாநிலங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஏப்ரல் 22ஆம் தேதி நெகிரி செம்பிலான் மாநிலத்தில் வெப்பநிலை ஆக அதிகமாக 38.4 டிகிரி செல்சியஸ் எனப் பதிவானது.
வெப்ப அலையின்போது நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் வெளிப்புற நடவடிக்கைகளுக்கு தற்காலிகமாகத் தடை விதிக்க கல்வி அமைச்சு கடந்த புதன்கிழமை உத்தரவிட்டது.
கிளந்தான் மாநிலத்தில் வெப்பத்தாக்கம், கடும் நீரிழப்பு ஏற்பட்டு ஏப்ரல் 25ஆம் தேதி 11 வயதுச் சிறுவன் உயிரிழந்தார். கடும் நீரிழப்பு ஏற்பட்டு அதே மாநிலத்தில் அதே நாள் 19 மாதக் குழந்தை இறந்துவிட்டது.
வெப்ப அலைக்கு மத்தியில் காற்றுத்தரம் குறித்த கவலையும் மக்களிடையே எழுந்துள்ளது.
ஜோகூர், பினாங்கு, கெடா, சிலாங்கூர், நெகிரி செம்பிலான், கிளந்தான், திரங்கானு உள்ளிட்ட மாநிலங்களில் ஏப்ரல் 16ஆம் தேதி காற்றுத்தர குறியீடு (ஏபிஐ) 150க்கு மேல் உயர்ந்தது. 101க்கும் 200க்கும் இடைப்பட்ட குறியீடு, காற்றுத்தரம் சரியில்லை என்பதைக் குறிக்கிறது.
புகைமூட்ட பாதிப்பைத் தணிக்கும் நோக்கில், தீப்பிடிக்கும் சாத்தியம் அதிகம் உள்ள காட்டுப் பகுதிகளையும் குப்பை நிரப்பும் நிலங்களையும் கண்காணிக்க பல்வேறு துறைகளுடன் சேர்ந்து தமது அமைச்சு பணியாற்றி வருவதாக திரு நிக் நஸ்மி தெரிவித்தார்.

