தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘தென்சீனக் கடலில் இந்திய-அமெரிக்க ஒத்துழைப்பு மேம்படும்’

2 mins read
1fce059b-7280-4c21-939e-92ad6e4de264
தென்சீனக் கடல் பகுதி. - படம்: பிலிப்பீன்ஸ் கரையோரக் காவல்படை

வாஷிங்டன்: தென்சீனக் கடல் விவகாரங்களில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான ஒத்துழைப்பு வலுவடையும் என்று தாம் நம்புவதாக கிழக்கு ஆசியாவுக்கான முன்னணி அமெரிக்க அரசதந்திரி டேனியல் கிரிட்டன்பிரிங்க் கூறியுள்ளார். தென்சீனக் கடலில் பல வட்டார நாடுகளுடன் எல்லை சம்பந்தப்பட்ட பூசல்களில் சீனா ஈடுபட்டுள்ளதைத் தொடர்ந்து அவர் இவ்வாறு சொன்னார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் அமெவுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டார். அப்போது உலகில் ஆக நெருக்கமான உறவைக் கொண்டுள்ள பங்காளி நாடுகளில் அமெரிக்காவும் இந்தியாவும் அடங்கும் என்று இரு நாடுகளும் அறிவித்தன.

கடற்துறை விதிமுறைகளை மையமாகக் கொண்டு நடைமுறையில் இருக்கும் கட்டமைப்பில் எழும் சவால்களைக் கையாள அனைத்துலகச் சட்டத்தைப் பின்பற்றுவதன் முக்கியத்துவமும் திரு மோடியின் பயணத்தின்போது வலியுறுத்தப்பட்டது.

சர்ச்சைக்குரிய தென்சீனக் கடல் பகுதியில் மிரட்டல் விடுக்கும் வகையிலான சீனாவின் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதை அமெரிக்கா அறிவதாகத் திரு கிரிட்டன்பிரிங்க் குறிப்பிட்டார். வாஷிங்டனின் உத்திபூர்வ, அனைத்துலக ஆய்வுகள் வல்லுநர்க் குழுவிடம் அவர் இதைச் சொன்னார்.

தென்சீனக் கடலில் இந்தியாவின் பங்களிப்பு அதிகரிக்கும் என்றும் அப்பகுதியில் அந்நாட்டுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே கூடுதல் ஒத்துழைப்பு இருக்கும் என்றும் திரு கிரிட்டன்பிரிங்க் கூறினார். அதோடு, அமெரிக்கா, ஜப்பான், இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பு வலுவடையும் என்பதையும் சுட்டினார். இந்த நான்கு நாடுகளும் உள்ள குழுமம் குவாட் என்றழைக்கப்படுகிறது.

தன்னைப்போல் அமைதியான, நிலைத்தன்மை உள்ள உலகை உருவாக்கும் கனவைக் கொண்ட பங்காளி நாடுகளின் ஆற்றலை மேம்படுத்துவதே இந்த வட்டாரத்தில் அமெரிக்காவின் குறிக்கோள் என்பதைத் திரு கிரிட்டன்பிரிங்க் தெரிவித்தார்.

“இந்தக் கனவைக் கொண்ட எந்த நாடுகளுடனும் ஒத்துழைக்க நாங்கள் தயாராய் இருக்கிறோம். நிச்சயமாக இந்தியாவும் அத்தகைய நாடுகளில் ஒன்று,” என்று திரு கிரிட்டன்பிரிங்க் கூறினார்.

“பெரிய நாடுகள் சிறிய நாடுகளைப் பயமுறுத்தி தொந்தரவு கொடுக்கக்கூடாது,” என்றும் அவர் சொன்னார். தென்சீனக் கடலில் சீனாவுக்கும் மற்ற நாடுகளுக்கும் இடையே இருந்துவரும் பிரச்சினைகளைப் பற்றி அவர் பேசினார்.

தென்சீனக் கடலின் பல பகுதிகளை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. அதனால் அங்கு பதற்றநிலை அதிகரித்திருக்கிறது.

தென்சீனக் கடல், உலகின் ஆக முக்கியமான வர்த்தகப் பாதைகளில் ஒன்று. ஆண்டுதோறும் அப்பகுதியில் இடம்பெறும் கப்பல்கள் தொடர்பான வர்த்தகத்தின் மதிப்பு மூன்று டிரில்லியன் டாலருக்கும் (4 டிரில்லியன் வெள்ளி) அதிகம்.

குறிப்புச் சொற்கள்