தோக்கியோ: ஜப்பானின் சில பகுதிகளில் பொழியும் கனமழையால் குறைந்தது ஒருவர் மாண்டுவிட்டதாகவும் ஒருவரைக் காணவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வீடுகளிலிருந்து வெளியேற வேண்டியிருக்கலாம் என்று கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஜப்பானின் கிழக்கு, மேற்கு, மத்தியப் பகுதிகளில் நிலச்சரிவுகள், வெள்ளம் உள்ளிட்ட பேரிடர்கள் ஏற்படலாம் என்று அந்நாட்டின் வானிலை அமைப்பு எச்சரித்துள்ளது.
யமாகுச்சி மாநிலத்தில் வாகனம் ஒன்றில் ஆடவர் ஒருவர் மாண்டுகிடந்தார். அந்த வாகனம் மழையால் ஓர் ஆற்றுக்குள் தள்ளப்பட்டிருந்தது.
ஒய்ட்டா மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் வீடு ஒன்று அழிந்துபோனது. அதில் வாழ்ந்துவந்த 70 வயது ஆடவரைக் காணவில்லை.
மீட்புப் பணியாளர்கள் அவரைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக ஓர் அதிகாரி தெரிவித்தார்.
ஒய்ட்டா, யமாகுச்சி உட்பட எட்டு மாநிலங்களில் வசிக்கும் சுமார் 1,855,000 மக்களுக்கு வீடுகளிலிருந்து வெளியேறக்கோரி ஆணை பிறப்பிக்கப்பட்டது. எனினும், அதன்படி அவர்கள் வீடுகளிலிருந்து வெளியேறுவது கட்டாயமல்ல.
பருவநிலை மாற்றத்தின் காரணமாக கனமழை பொழியும் அபாயம் அதிகரித்துள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். சுற்றுச்சூழலின் வெப்பநிலை அதிகரிக்கும்போது அதில் கூடுதல் நீர் சேரும் என்று அவர்கள் சொல்கின்றனர்.
ஜப்பானில் 2021ஆம் ஆண்டில் கடும் மழை பொழிந்தது. அதனால் சுற்றுப்பயண நகரான அட்டாமியில் மோசமான நிலச்சரிவு ஏற்பட்டது. அதில் 27 பேர் மாண்டனர்.
தொடர்புடைய செய்திகள்
2018ஆம் ஆண்டில் பொழிந்த கனமழையால் நிகழ்ந்த நிலச்சரிவுகளிலும் வெள்ளத்திலும் 200க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

