பிலிப்பீன்சின் கடலோர நெடுஞ்சாலை ஒன்றில் செவ்வாய்க்கிழமை பண மழை பெய்தது.
சில நொடிகளில் வாகனமோட்டிகளும் பயணிகளும் முண்டியடித்து சாலையெங்கும் சிதறிக் கிடந்த பணத்தாள்களைச் சேகரிக்கக் குவிந்தனர்.
சிபு சவுத் கோஸ்டல் ரோடு வழியாக பணம் வசூலிக்கும் ஆடவர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார்.
அந்த வட்டாரத்தில் இருந்த நிறுவனங்களிடம் இருந்து வசூலித்த கட்டணத்தைத் தனது பையில் வைத்து முதுகில் சுமந்தபடி நெடுஞ்சாலையில் பயணம் செய்தார் அவர்.
ஏறத்தாழ 4 மில்லியன் பெசோ ($97,234) வசூல் பணத்தை வைத்திருந்த பை வழியில் திறந்துகொண்டதையோ சாலையெங்கும் பணம் சிதறுவதையோ அந்த ஆடவர் அறியவில்லை.
மற்றொரு மோட்டார் சைக்கிளோட்டி கூறிய பிறகே அவருக்கு அது தெரியவந்தது. அதற்குள் கிட்டத்தட்ட 1 மில்லியன் பெசோ ($24,308) பணம் சிதறிவிட்டது.
தகவலறிந்து வந்த காவல்துறையினர் கிட்டத்தட்ட 2.01 மில்லியன் பெசோவை ($48,860) மீட்டதாகக் கூறினர்.
பணத்தை எடுத்தவர்கள் அதைத் திருப்பித்தரும்படி அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். இல்லாவிட்டால் பணம் வசூலிக்கும் வேலை செய்யும் அந்த ஆடவர் அந்தத் தொகைக்குப் பொறுப்பு ஏற்க நேரிடும் என்பதை அவர்கள் சுட்டினர்.

