அரசியலையும் பருவநிலை மாற்றத்தையும் வேறுபடுத்திப் பார்க்கவும்: சீனாவிடம் ஜான் கெரி

1 mins read
9cca947e-07d4-4e7e-8168-7c9256f9c879
பருவநிலைக்கான அமெரிக்கத் தூதர் ஜான் கெரி (இடது), சீனப் பிரதமர் லி சியாங்கை பெய்ஜிங்கில் செவ்வாய்க்கிழமை சந்தித்தார். - படம்: இபிஏ

பெய்ஜிங்: பருவநிலை மாற்றம் அரசியல் விவகாரங்களுக்கு அப்பாற்பட்ட தனியொரு பிரச்சினையாகக் கையாளப்படவேண்டிய ‘அனைத்துலக அச்சுறுத்தல்’ என்று சீனத் துணை அதிபர் ஹான் ஜெங்கிடம் அமெரிக்காவின் பருவநிலைத் தூதர் ஜான் கெரி கூறியிருக்கிறார்.

இருநாடுகளுக்கும் இடையில் அண்மை ஆண்டுகளாக அரசியல் பிரச்சினைகள் நிலவுவதாகக் குறிப்பிட்ட திரு கேரி, உலகின் மிகப்பெரிய பொருளியல் நாடுகளின் கூட்டுமுயற்சி தேவைப்படும் ‘தனியொரு’ சவாலாகப் பருவநிலை மாற்றம் கருதப்படவேண்டும் என்று கூறினார்.

பெய்ஜிங்கில் உள்ள சீனாவின் நாடாளுமன்றக் கட்டடத்தில் நடந்த சந்திப்பின்போது அவர் பேசினார்.

ஐரோப்பா, ஆசியா, அமெரிக்காவின் பல பகுதிகளில் வெப்பம் சுட்டெரிக்கையில், திரு கெரி ஞாயிற்றுக்கிழமை பெய்ஜிங்கைச் சென்றடைந்தார்.

சீனத் தூதர் வாங் யீ, பிரதமர் லி சியாங் ஆகியோரை அவர் சந்தித்துப் பேசினார். இவ்வாண்டு இறுதியில் துபாயில் நடைபெறவிருக்கும் COP28 பருவநிலை பேச்சுவார்த்தைக்கு முன்பாக இரு நாட்டுக்கும் இடையில் நம்பிக்கையை வளர்க்க திரு கெரி முயற்சி எடுக்கிறார்.

“அடுத்த சில மாதங்களில் நம்மால் ஒன்றுசேர்ந்து செயல்பட முடியுமானால், இந்த விவகாரத்தில் பயன்மிக்க மாற்றத்தை உண்டாக்க நமக்கொரு வாய்ப்பு கிடைக்கும்,” என்று திரு ஹானிடம் அவர் கூறினார்.

திரு கெரி தூதராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இருநாடுகளும் பருவநிலை குறித்து நெருங்கிய தொடர்பை நிலைநாட்டி வருவதாகத் திரு ஹான் தெரிவித்தார். இருதரப்பும் வெளியிட்ட கூட்டறிக்கை, உலகிற்கு ‘ஆக்ககரமான சமிக்ஞை’ அனுப்பியிருப்பதாகவும் அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்