சனுர்: உடற்பயிற்சிக்கூடத்தில் இந்தோனீசிய உடற்தகுதிப் பயிற்றுவிப்பாளர் ஒருவர் எடை தூக்கிக்கொண்டு இருந்தபோது கழுத்து எலும்பு முறிந்து அவர் உயிரிழந்தார்.
இந்தோனீசியாவின் சனுரில் உள்ள உடற்பயிற்சிக்கூடத்தில் திரு ஜஸ்டின் விக்கி, 33, எடை தூக்கியபோது இச்சம்பவம் நிகழ்ந்ததாக உள்ளூர் ஊடகத் தகவல்கள் கூறுகின்றன.
அவர் தூக்கிய எடை 180 கிலோவுக்கும் 210 கிலோவுக்கும் இடைப்பட்டிருந்தது.
அந்த எடையைத் தூக்குவதில் திணறிய திரு ஜஸ்டின், ஒரு கட்டத்தில் தடுமாறி தரையில் விழுந்தார். இதில் அந்த எடை அவரது கழுத்துப் பகுதியில் விழுந்தது.
அந்த எடை விழுந்தபோது திரு ஜஸ்டினுக்குப் பின்னால் அவரின் உதவியாளர் இருந்தார். அந்த எடையைப் பிடித்துக்கொள்ள முயன்றும் அது திரு ஜஸ்டின்மீது விழுவதை அவரால் தடுக்க முடியவில்லை.
கழுத்து எலும்பு முறிந்து திரு ஜஸ்டின் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
திரு ஜஸ்டினின் மரணத்தைத் தொடர்ந்து இணையத்தில் இரங்கல் செய்திகள் குவிந்து வருகின்றன. அவரது இன்ஸ்டகிராம் பக்கத்தை 30,000க்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர்.

