வாஷிங்டன்: உலக வரலாற்றில் ஆக வெப்பமான மாதம் என்ற நிலையை இந்த மாதம் (ஜூலை, 2023) எட்டக்கூடும் என்று அறிவியலாளர்கள் வியாழக்கிழமை கூறியுள்ளனர்.
ஐக்கிய நாட்டு நிறுவனத் தலைமைச் செயலாளர் அண்டோனியோ குட்டரஸ், பூமியில் ‘உலகளாவிய கொதிநிலைக் காலகட்டம்’ ஏற்பட்டுள்ளதாக எச்சரித்துள்ள வேளையில் அறிவியலாளர்களின் கருத்து வெளியாகியுள்ளது.
ஐரோப்பா, ஆசியா, வட அமெரிக்கா என உலகின் பல பகுதிகளில் அதிக வெப்பத்தால் பல மில்லியன் கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கனடாவிலும் ஐரோப்பாவின் தெற்குப் பகுதியிலும் காட்டுத் தீ மோசமடைந்துள்ளது.
“பருவநிலை மாற்றத்தின் தொடக்கம்தான் இது. மிகவும் அச்சுறுத்துவதாக உள்ளது,” என்றார் திரு குட்டரஸ். பூமியைப் பாதிக்கக்கூடிய வாயுக்களின் வெளியேற்றத்தைக் குறைப்பது தொடர்பில் உடனடியாக துணிச்சலான நடவடிக்கை எடுப்பது அவசியம் என்றார் அவர்.
“உலக வெப்பமயமாதல் என்ற சகாப்தம் முடிவடைந்து இப்போது உலகக் கொதிநிலைக் காலகட்டம் ஏற்பட்டுள்ளது,” என்று அவர் குறிப்பிட்டார்.
ஜூலை மாதத்தின் முதல் மூன்று வாரங்களில் உலகளாவிய சராசரி வெப்பநிலை முன்னெப்போதையும்விட அதிகமாகப் பதிவாகியுள்ளது.
உலக வானிலை ஆய்வகமும் ஐரோப்பாவின் கோப்பர்நிகஸ் வானிலை ஆய்வு நிலையமும் இது உலக வரலாற்றில் ஆக வெப்பமான மாதமாக விளங்கக்கூடும் என்று கருத்துரைத்துள்ளன.
தொடர்புடைய செய்திகள்
சொல்லப்போனால், பல ஆயிரம் ஆண்டு காணாத அளவு வெப்பநிலை ஜூலை 2023ல் நிலவுவதாக கோப்பர்நிகஸ் வானிலை ஆய்வு நிலைய விஞ்ஞானிகள் கருதுகின்றனர். 100,000 ஆண்டுகள் என்றுகூட சொல்லலாம் என்பது அவர்கள் கருத்து.
மரங்களின் வயதைக் கணிக்க உதவும் அவற்றின் அடிப்பாகத்தில் காணப்படும் வளையங்கள், பனிப்பாறைகளில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் போன்றவற்றின் அடிப்படையில் அவர்கள் அவ்வாறு கருத்துரைத்தனர்.
1800களின் பிற்பகுதி முதல் உலக வெப்பநிலை கிட்டத்தட்ட 1.2 டிகிரி செல்சியஸ் உயர்ந்துள்ளது. இதனால் அடிக்கடி வெப்ப அலை, சூறாவளி, வெள்ளம் போன்றவை ஏற்படுகின்றன. இத்தகைய பருவநிலை மாற்ற விளைவுகளால் உலகளாவிய நிலையில் சுகாதாரம், பல்லுயிர்ச் சூழல், பொருளியல் போன்றவை மிகவும் பாதிக்கப்படும் என்பதைக் கவனிப்பாளர்கள் சுட்டினர்.