பெய்ஜிங்: பெயர் குறிப்பிடப்படாத நாடுகள் கப்பல்களையும் விமானங்களையும் அடிக்கடி அனுப்பித் தங்களின் ‘ராணுவப் படைப் பலத்தைச் சுயநலம் கருதிக் காட்டிக்கொள்வது’ கிழக்கு, தென் சீனக் கடல் பகுதிகளில் பதற்றநிலையை அதிகரித்துள்ளதாக சீனத் தற்காப்பு அமைச்சு சனிக்கிழமை ஜூலை 29ஆம் தேதியன்று தெரிவித்தது.
ஜப்பானியத் தற்காப்பு அறிக்கை ஒன்றில் சீனாவின் மிரட்டல்கள் சுட்டிக்காட்டப்பட்டது தொடர்பில் கருத்துரைத்த அமைச்சின் பேச்சாளர் டான் கெஃபெய், கிழக்கு, தென்சீனக் கடல் பகுதிகளில் நிலைமை சீராக இருந்தாலும் இத்தகைய செயல்கள் வட்டாரப் பதற்றநிலையை மேலும் மோசமாக்கியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
சீனாவைப் பற்றிய ஒரு ‘தவறான கண்ணோட்டத்தை’ ஜப்பானின் வருடாந்திரத் தற்காப்பு அறிக்கை தந்துள்ளதாக மூத்த கர்னல் சான் கூறினார். அத்துடன் அது ‘சீனாவின் ராணுவ மிரட்டல் என்று சொல்லப்படும் கூற்றை வேண்டுமென்றே மிகைப்படுத்துவதாகவும்’ அவர் குறிப்பிட்டார்.
சீனாவின் உள்நாட்டு விவகாரங்களில் தொடர்ந்து தலையிடுதல், அனைத்துலக உறவுகளின் விதிமுறைகளை மீறுதல், சீன-ஜப்பானிய உறவின் அடித்தளத்தைக் குறைத்து மதிப்பிடுதல், தைவானிய நீரிணை நிலவரத்தை மேலும் மோசமாக்குதல் ஆகிய அம்சங்கள் தொடர்பில் ஜப்பானின் செயல்பாடுகள் குறித்தும் அவர் வலியுறுத்தினார்.
கடந்த வாரம் ஜப்பான் அதன் வருடாந்திரத் தற்காப்பு அறிக்கையை வெளியிட்டது. சீனாவின் எல்லைசார்ந்த லட்சியங்கள், ரஷ்யாவுடனும் தென்கொரியாவுடனும் அது கொண்டுள்ள பாதுகாப்புப் பங்காளித்துவ உறவு ஆகியவை தொடர்பில் விரும்பத்தகாத மதிப்பீட்டை அந்த அறிக்கை கொண்டிருந்தது.