பெய்ஜிங்கில் 140 ஆண்டுகள் இல்லாத மழை

2 mins read
9ebf52e3-724c-4b6e-85c6-bf0bf688b233
பெய்ஜிங் வெள்ளத்தில் நடமாடச் சிரமப்படும் ஒரு மாதுக்கு உதவும் மீட்புப் பணியாளர். - படம்: ராய்ட்டர்ஸ்

பெய்ஜிங்: சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் 140 ஆண்டுகளில் இல்லாத அளவில் கனமழை கடந்த சில நாள்களில் பெய்திருக்கிறது. அந்நகரின் வானிலை சேவை இதைத் தெரிவித்துள்ளது.

அந்த காலகட்டத்திலிருந்துதான் வானிலை தொடர்பான புள்ளி விவரங்கள் வரையப்பட்டு வருகின்றன.

டொக்சுரி என்று பெயரிடப்பட்டுள்ள புயல் சில நாள்களுக்கு முன்பு சீனாவைத் தாக்கியது. இப்புயல் முன்னதாக ‘சூப்பர் டைஃபூன்’ சூறாவளியாக வகைப்படுத்தப்பட்டிருந்தது.

சனிக்கிழமை முதல் பெய்ஜிங்கிலும் அதன் சுற்று வட்டாரங்களிலும் கனமழை பெய்தது; கிட்டத்தட்ட 2023ஆம் ஆண்டு ஜூலை மாதம் பெய்த மழை சென்ற வாரம் ஒன்றரை நாளில் பெய்திருக்கிறது. பெய்ஜிங், அதன் அருகில் இருக்கும் ஹெபெய் மாநிலம் ஆகியவற்றில் பெய்த கனமழைக்குக் குறைந்தது 20 பேர் பலியாகிவிட்டனர்.

மழையால் சுமார் 40 விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. குறைந்தது மூன்று ரயில் சேவைகள் பயணம் மேற்கொள்ள முடியாமல் தண்டவாளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டன.

பாதிக்கப்பட்ட ரயில்களில் பல பயணிகள் இருந்தினர். பயணிகள் குறைந்தது 30 மணிநேரத்துக்கு ரயிலில் இருக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. அவர்களுக்குப் போதுமான உணவு, நீர் இல்லாமல் போனது.

பயணிகளுக்கு அத்தியாவசியப் பொருள்களை வழங்க செவ்வாய்க்கிழமை காலை பல ஹெலிகாப்டர்கள் பணியில் இடுபடுத்தப்பட்டன. ரயில்களில் சிக்கியோரை மீட்கும் முயற்சியில் முழுவீச்சில் இறங்கவேண்டும் என சீன அதிபர் ஸி ஜின்பிங் செவ்வாய்க்கிழமையன்று குரல் கொடுத்திருந்தார்.

இவ்வாண்டு கோடைக்லத்தில் சீனா மோசமான பருவநிலையை எதிர்கொண்டு வந்துள்ளது. பருவநிலை மாற்றம் இதற்கான காரணம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்