மணிலா: வடக்கு பிலிப்பீன்சைத் தாக்கிய பிறகு சாவ்லா சூறாவளி தைவானை நோக்கி நகர்கிறது.
இதனையடுத்து, தைவானில் அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன; விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
பிலிப்பீன்சின் வானிலை ஆய்வு நிலையமான ‘பகாசா’, அந்நாட்டின் வடக்குப் பகுதிகளில் பெருங்காற்றுக்கான மூன்றாவது ஆக உயரிய எச்சரிக்கையை விடுத்தது. மோசமான சூறாவாளி தாக்கக்கூடும் என்றும் கட்டடங்களுக்கு சேதம் ஏற்படக்கூடும் என்றும் புதன்கிழமை காலை எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
செவ்வாய்க்கிழமையன்று சாவ்லா மோசமான சூறாவளியாக உருவெடுத்தது. பிலிப்பீன்சின் பட்டானிஸ் மாநிலத்தின் நீர்ப்பகுதியைத் தாண்டி, சூறாவளி வீசியதாக பகாசா தெரிவித்தது.
சூறாவளி காரணமாக பிலிப்பீன்சில் கிட்டத்தட்ட 50,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.
தைவானின் தென்கோடியிலிருந்து ஏறத்தாழ 200 கிலோமீட்டர் தொலைவில் சூறாவளி இருந்தபோது, ‘டிஎஸ்எம்சி’ எனப்படும் தைவானிய குறைகடத்தி நிறுவனம் தனது ஆலைகளில் சில அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டது.
சாவ்லா சூறாவளி ஹாங்காங்கிலிருந்து 800 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. வியாழக்கிழமைக்குள் சாவ்லா ஹாங்காங்கின் கிழக்குக் கடற்கரைப் பகுதியைத் தாக்கக்கூடும் என்று ஹாங்காங் வானிலை ஆய்வு நிலையம் புதன்கிழமையன்று அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டது.
வார இறுதியில் ஆகக் குறைவான சூறாவளி எச்சரிக்கையை விடுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அந்த ஆய்வு நிலையம் தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
சாவ்லா சூறாவளி மணிக்கு 240 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

