தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அதிக ‘கஃபைன்’ கொண்ட பானங்களைப் பிள்ளைகளுக்குத் தடை செய்ய வேண்டுகோள்

2 mins read
f961ed41-922a-44cb-9d53-96544406e81b
அதிக அளவில் கஃபைன் உள்ள உடல் ஆற்றல் பானங்களில் ஒன்றான ‘பிரைம் எனர்ஜி’. - படம்: ராய்ட்டர்ஸ்

வாஷிங்டன்: ‘கஃபைன்’ அதிகமாகக் கொண்ட ஆற்றல் பானங்களைப் போதிய வயதை அடையாதோர் அருந்த தடை விதிக்குமாறு குரல் கொடுக்கப்பட்டுள்ளது.

அத்தகைய உடல் ஆற்றல் பானங்களை சிகெரெட்டுகள், மதுபானங்கள் ஆகியவற்றைப் போல் வகைப்படுத்துமாறு குழந்தை மருத்துவர்களும் பெற்றோரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

350 மில்லிலிட்டர் கொள்ளளவைக் கொண்ட குவளையில் பொட்டலமிடப்படும் ‘பிரைம் எனர்ஜி’ ஆற்றல் பானத்தில் 200 மில்லிகிராம் கஃபைன் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு குவளை பானத்தில் இவ்வளவு ‘கஃபைன்’ இருப்பது, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா ஆகிய நாடுகளில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமானதாகும்.

‘பிரைம் எனர்ஜி’ பானம், 2023ஆம் ஆண்டு அறிமுகமானது. அதற்குப் போட்டியாக இருக்கும் அன்ஹியூசர் புஷ் இன்பெவ் நிறுவனத்தின் ‘கோஸ்ட்’, பிரபல நட்சத்திரம் கிம் கர்டாஷியனின் ‘கிமேட்’ ஆகிய உடல் ஆற்றல் பானங்களிலும் 200 மில்லிகிராம் அளவு கஃபைன் உள்ளது.

‘மான்ஸ்டர் எனர்ஜி’ உடல் ஆற்றல் பானத்தில் 150 மில்லிகிராம் அளவு கஃபைன் இருக்கிறது.

அண்மைய ஆண்டுகளில் உடல் ஆற்றல் பானங்களின் கஃபைன் அளவு அதிகரித்து வந்துள்ளதால் சில நாடுகளும் சில்லறை வர்த்தகங்களும் அவற்றுக்குத் தடை விதித்துள்ளன. சில இடங்களில் அத்தகைய பானங்களை வாங்கும் வாடிக்கையாளர் தனது வயதை உறுதிப்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனிலும் அமெரிக்காவிலும் அதிக அளவில் கஃபைன் கொண்ட ஆற்றல் பானங்களைத் தடை செய்ய வகைசெய்யும் விதிமுறை ஏதும் கிடையாது.

இந்த விவகாரத்தின் தொடர்பில் சம்பந்தப்பட்ட ஆற்றல் பானங்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள், தங்களிடம் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கவில்லை.

குறிப்புச் சொற்கள்