பேங்காக், பாகோ: தாய்லாந்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு, வடகிழக்குப் பகுதிகளில் உள்ள 34 மாவட்டங்களில் நிலைமை மெல்ல சீரடைந்து வருகிறது.
எனினும், அடுத்த மூன்று நாட்களில் வடக்கிலும், வடகிழக்கிலும் பல மாகாணங்கள் திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்படலாம் என்று தேசிய நீர்வள அலுவலகம் செவ்வாய்க்கிழமை எச்சரித்துள்ளது.
631 கிராமங்களில் 16,500 குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன. ஏராளமான விவசாய நிலங்களும் பாழ்பட்டுள்ளன.
தென் சீனக் கடற்கரைக்கு அருகில் உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் தாக்கம் காரணமாக தாய்லாந்தில் அதிக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால், நாட்டின் பல பகுதிகளில் நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்தில் தற்போது நாடு முழுவதும் உள்ள நீர்த்தேக்கங்களில் ஏறக்குறைய 57,512 பில்லியன் கன மீட்டர் தண்ணீர் நிறைந்துள்ளது. இது நீர்த்தேக்கங்களின் மொத்த கொள்ளளவில் 70 விழுக்காடு.
எனினும், 2022ஆம் ஆண்டில் இருந்ததைவிட 8.9 பில்லியன் கன மீட்டர் குறைவு. எனினும், அடுத்த வறண்ட பருவகாலத்தில் விவசாயத்திற்கு போதுமானதாக இருக்கும்.
யோம் நதி, முன் நதி, யுங் நதி ஆகிய மூன்று ஆறுகளில் நீர்நிறைந்தோடுவதால், கரைகள் உடைபடக்கூடிய சாத்தியம் இருப்பதாகவும் தேசிய நீர்வள அலுவலகம் கூறியது.
இதற்கிடையே மியன்மாரில் வெள்ளத்தால் 14,000 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
கடுமையாகப் பாதிக்கப்பட்ட பாகோ நகர மக்கள் நீரில் மூழ்கிய வீடுகளில் இருந்து உணவு, பொருட்களை முடிந்தவரையில் மீட்டு வருகின்றனர்.
“என் வாழ்க்கையில் எனது வீடு வெள்ளத்தில் மூழ்குவது இதுவே முதல் முறை,” என்று 101 வயதான திருவாட்டி ஹ்யூமை விட பார் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
“எனது வீடு வெள்ளத்தில் மூழ்கியபோது நான் நாற்காலியில் நின்று கொண்டிருந்தேன். எனது அண்டை வீட்டாரும் மீட்புப் பணியாளர்களும் என்னை முகாமுக்குப் போகச் சொன்னார்கள். அவர்கள் என்னை முதுகில் சுமந்து கொண்டு அங்கு அழைத்துச் சென்றனர்,” என்றார் அவர்.
மியன்மார் அரசு ஆதரவு பெற்ற ‘குளோபல் நியூ லைட்’ அமைப்பின் அறிக்கையின்படி, உள்ளூர் அரசாங்கத்தின் தற்காலிக நிவாரண மையங்களில் கிட்டத்தட்ட 5,600 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஜூலை மாதத்திலிருந்து மியன்மாரில் ஏற்பட்டுவரும் வெள்ளத்தால் அந்நாட்டின் ஒன்பது மாநிலங்களும் வட்டாரங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
மழைக்காலத்தில் மியன்மாரில் பெருமழை பெய்வது வழமை. ஆனால், தற்போது மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட பருவநிலை மாற்றங்கள் காரணமான, பருவமாற்றங்கள் மிகவும் மோசமாக உள்ளதாக அறிவியல் அறிஞர்கள் கூறினர்.

