பேங்காக்: தாய்லாந்தின் வடபகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் ஐவர் உயிரிழந்தனர்.
மேலும் கனமழை பெய்யும் என்று அதிகாரிகள், செவ்வாய்க்கிழமை எச்சரித்துள்ளனர். 32 வட்டாரங்களில் வெள்ள அபாயம் குறித்து அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த செப்டம்பர் மாதம் பருவமழை தொடங்கியதிலிருந்து மொத்தம் 23 பேர் வெள்ளத்தில் மாண்டதாகவும் 33 பேர் காயமடைந்ததாகவும் தாய்லாந்தின் பொதுச் சுகாதார அமைச்சு தெரிவித்தது.
தலைநகர் பேங்காக்கிலும் புகழ்பெற்ற உல்லாசத் தலமான புக்கெட்டிலும் கனமழை பெய்யுமென முன்னுரைக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கிலிருந்து அந்தமான் கடல், தாய்லாந்து வளைகுடா ஆகியவற்றின்மேலாக வீசும் பருவக்காற்று தாய்லாந்திற்கு கனமழையைக் கொண்டுவரும் என்று அந்நாட்டு உள்துறை அமைச்சு தெரிவித்தது.
இந்தப் பருவத்தில் நாட்டிலுள்ள 62,000 குடும்பங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதாக அது குறிப்பிட்டது.
அண்மைய வாரங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்ட பிரதமர் ஸ்ரேத்தா தவிசின், நிவாரண உதவிகளுக்கு உத்தரவிட்டார்.

