வறுத்த வாழைக்காக நிறுத்திய ஆம்புலன்ஸ் ஓட்டுநரை வறுத்தெடுக்கும் இணையவாசிகள்

வறுத்த வாழைக்காக நிறுத்திய ஆம்புலன்ஸ் ஓட்டுநரை வறுத்தெடுக்கும் இணையவாசிகள்

1 mins read
13855803-f2f6-41a2-9f83-c4c659b2f6ca
நோயாளியிடம் மன்னிப்பு கேட்பதற்காக மருத்துவமனை தாதியர் அவர் வீட்டுக்குச் சென்றனர். - படம்: இணையம்

பேங்காக்: நோயாளியை மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும்போது மூன்று வினாடிகள் காத்திருப்பது நீண்ட தாமதமாகிவிடுமா? தாய்லாந்தின் நக்கோன் நயோக் பகுதியைச் சேர்ந்த ஒரு நோயாளியின் மகள் ‘ஆமாம்’ என்கிறார்.

தன் தந்தையின் உயிருக்கு ஆபத்து விளைவித்ததாக அவசர மருத்துவ வண்டி ஓட்டுநர் மீது அவர் குற்றம் கூறியுள்ளார்.

தன் தந்தையை வீட்டிலிருந்து அழைத்துச் செல்வதற்காக வந்த மருத்துவ வண்டி, சற்று தாமதமாக வந்ததாகவும் ஓட்டுநர் வரும் வழியில் செடிகளை ரசித்ததாகவும் கூறப்படுகிறது. இது போதாது என மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் அந்த ஓட்டுநர் வறுத்த வாழைப்பழத்தையும் வாங்கி இருக்கிறார்.

ஓட்டுநரை நோக்கித் தான் கூச்சலிடும் காணொளி ஒன்றை நோயாளியின் மகள் திருவாட்டி சுச்சாடா ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்ததுடன் மருத்துவமனையிடமிருந்து விளக்கம் வேண்டும் என்றும் கேட்டிருந்தார்.

பதிலளிக்காமல் குற்றவுணர்வுடன் ஓட்டுநர் நின்றிருப்பதைக் காணொளி காட்டுகிறது.

நக்கோன் நயோக் மருத்துவமனை மேற்கொண்ட விசாரணையில் அந்த மூன்று வினாடி தாமதத்தால் யார் உயிருக்கும் ஆபத்து நேரவில்லை என்றாலும் ஓட்டுநர் மீது தவறு உண்டு என்று கண்டறியப்பட்டது.

இதற்கிடையே, ஓட்டுநர் பொறுப்பற்ற முறையில் நடந்துகொண்டதாக இணையவாசிகள் பலவாறாக அவரை விமர்சித்து வருகின்றனர்.

இதையடுத்து, நக்கோன் நயோக் மருத்துவமனை தாதியர் சிலர் நோயாளியின் வீட்டுக்குச் சென்று அவரிடம் நேரடியாக மன்னிப்பு கோரியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்