மணிலா: தென்சீனக் கடலின் சுதந்திரத்தைப் பாதுகாக்க ஜப்பான், பிலிப்பீன்ஸ், அமெரிக்கா ஆகிய நாடுகள் ஒத்துழைப்பு நல்கி வருவதாக ஜப்பானியப் பிரதமர் ஃபுமியோ கிஷிடா கூறியுள்ளார்.
பிலிப்பீன்சின் பாதுகாப்பு ஆற்றலை மேம்படுத்த உதவ தாம் கடப்பாடு கொண்டிருப்பதாக அவர் சொன்னார்.
அதிகாரத்துவப் பயணமாக பிலிப்பீன்ஸ் சென்றுள்ள திரு கிஷிடா, தலைநகர் மணிலாவில் பிலிப்பீன்ஸ் நாடாளுமன்றத்தில் சனிக்கிழமை உரையாற்றியபோது இதனைத் தெரிவித்தார்.
பிலிப்பீன்ஸ் அதிபர் ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியரை திரு கிஷிடா வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார்.
ராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்த, பிலிப்பீன்சில் ஜப்பானிய ராணுவத்தினரையும் ஜப்பானில் பிலிப்பீன்ஸ் ராணுவத்தினரையும் பணியில் ஈடுபடுத்துவது தொடர்பில் பேச்சுவார்த்தையைத் தொடங்க இரு தலைவர்களும் இணக்கம் தெரிவித்தனர்.
அமெரிக்காவுக்கு நெருக்கமான இரு ஆசிய நட்பு நாடுகளான பிலிப்பீன்சும் ஜப்பானும் தென்சீனக் கடலில் சீனக் கப்பல்களின் மூர்க்கத்தனமான செயல்பாட்டைக் கடுமையானதாகக் கருதுகின்றன.
தென்சீனக் கடலில் சீனக் கப்பலும் பிலிப்பீன்ஸ் படகும் மோதிக்கொண்டதைத் தொடர்ந்து, கடந்த மாதம் சீனாவும் பிலிப்பீன்சும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டைச் சுமத்தினர். தென்சீனக் கடலுக்குப் படைகளை அனுப்பிய பிலிப்பீன்ஸ் படகுகளை சீனக் கப்பல்கள் வழிமறித்ததை அடுத்து அங்கு விபத்து நிகழ்ந்தது.
ஒட்டுமொத்த தென்சீனக் கடலுக்கும் சீனா இறையாண்மை கோருகிறது. புருணை, இந்தோனீசியா, மலேசியா, பிலிப்பீன்ஸ், வியட்னாம் ஆகிய நாடுகளின் பிரத்தியேக பொருளியல் மண்டலங்களும் தென்சீன கடற்பகுதியில் அடங்கும்.
தொடர்புடைய செய்திகள்
சீனாவின் கோரிக்கைகளுக்கு சட்டபூர்வ ஆதாரமில்லை எனக் கூறி நிரந்தர நடுவர் நீதிமன்றம் 2016ல் தீர்ப்பளித்தது.
தென்சீனக் கடலில் ஜப்பான் உரிமை கொண்டாடவில்லை என்றாலும், கிழக்கு சீனக் கடலில் சீனாவுடன் அது வேறொரு சச்சரவில் ஈடுபட்டு வருகிறது.