காஸாவில் கூடுதலான மருத்துவமனைகள் இயங்கவில்லை

காஸாவில் கூடுதலான மருத்துவமனைகள் இயங்கவில்லை

1 mins read
b00efdc7-883d-4ccf-80bc-f1c41b0e036f
காஸாவின் அல் ஷிஃபா மருத்துவமனையில் இன்கியூபேட்டரில் இருந்து எடுத்து சாதாரண படுக்கையில் வைக்கப்பட்டுள்ள பச்சிளங்குழந்தைகள். - படம்: ராய்ட்டர்ஸ்

காஸா: காஸாவில் மேலும் இரு மருத்துவமனைகள் ஞாயிற்றுக்கிழமை புதிய நோயாளிகளை ஏற்க மறுத்துவிட்டன.

இஸ்ரேலியப் படையினரின் தொடர் தாக்குதலாலும் எரிபொருள், மருந்துப் பொருள்கள் தீர்ந்துவிட்டதாலும் கூடுதலான குழந்தைகள் உயிரிழக்கக்கூடும் என்று மருத்துவமனை ஊழியர்கள் எச்சரிக்கின்றனர்.

இஸ்ரேலியப் படையினர், வடக்கு காஸாவில் உள்ள மருத்துவமனைகளைச் சுற்றி முற்றுகையிட்டுள்ளனர். ஹமாஸ் போராளிகளை நோக்கி தான் படையெடுப்பதாகக் கூறிய இஸ்ரேல், மருத்துவமனைகளில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தியது.

காஸாவின் இரு பெரிய மருத்துவமனைகளாக அல் ஷிஃபா, அல் குட்ஸ் செயல்பாடுகளைத் தற்காலிகமாக நிறுத்திவைப்பதாகக் கூறின.

போரால் தினமும் கூடுதலானோர் கொல்லப்பட்டு, காயமடைந்துவரும் வேளையில், பாதியளவு மருத்துவமனைகள் இயங்காமல் போயுள்ளதால் காயமுற்றோருக்கு மருத்துவ வசதிகள் மிகவும் குறைந்துள்ளன.

இந்நிலையில், அல் ஷிஃபா மருத்துவமனையில் உள்ள மருத்துவ நிபுணர்களுடன் உலக சுகாதார நிறுவனத்தால் தொடர்பை மீட்டெடுக்க முடிந்ததாக அதன் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கேப்ரியேசுஸ் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

காஸாவில் ஏற்கெனவே நிலவரம் இக்கட்டாக உள்ள வேளையில், தொடர் துப்பாக்கிச்சூடும் குண்டுவெடிப்பும் அங்கு நிலைமையைப் படுமோசமடையச் செய்துள்ளதாக அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்