பாசிர் கூடாங்: ஜோகூரின் ஜாலான் டமாய் 8, கம்போங் செந்தோசா டமாய் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கிய எட்டுப் பேரை தீயணைப்புப் படை வீரர்கள் பாதுகாப்பாக மீட்டனர்.
பாசிர் கூடாங் தீயணைப்பு, மீட்பு நிலையத்தின் உறுப்பினர்கள் சம்பவம் நடந்த இடத்திற்கு உடனடியாக விரைந்தனர் என்றும் கிராமப் பகுதியைச் சுற்றி வெள்ள நீர் மூன்றடி உயரத்திற்கு இருந்ததாகவும் பாசிர் கூடாங் தீயணைப்பு, மீட்பு நிலையத்தின் மூத்த தீயணைப்பு நடவடிக்கை தளபளதி ரம்லி ஏ ஹமிட் கூறினார்.
வீடுகள் சேதமடைந்ததால் வெள்ளத்தில் தத்தளித்த வயதான மாது உட்பட எட்டுப் பேர் மீட்கப்பட்டதாகவும் அவர்கள் இரு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் சொன்னார்.
நவம்பர் 11ஆம் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரையில் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் வடகிழக்குப் பருவமழைக் காலம் முழுவதிலும் நான்கிலிருந்து ஆறு முறை தொடர் கனமழை பெய்யும் என்று கணிக்கப்படுவதாக மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட் மலேசியா) அறிவித்துள்ளது.
வியாழன் முதல் நான்கு மாநிலங்களில் தொடர் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நவம்பர் 16 முதல் 18 வரை கிளந்தான், தெரெங்கானு, பகாங், சாபா ஆகிய மாநிலங்களில் பல பகுதிகளில் தொடர் மழை எதிர்பார்க்கப்படுவதாக மெட்மலேசியா திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பல இடங்களில் வெள்ளம் ஏற்படும் சாத்தியம் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. முன்னேற்பாடாக 210,000 பேர் தங்கக்கூடிய 8,841 தற்காலிக வெள்ள நிவாரண மையங்கள் தயார்நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிலாங்கூரில் வெள்ளம் ஏற்படும் பகுதிகளில் நீர் வெளியேற்றக்கூடிய 40 நீர் வெளியேற்றும் இயந்திரங்களை சிலாங்கூர் அரசாங்கம் நிறுத்திவைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
http://www.met.gov.my என்ற இணையத்தளத்தில் வானிலை நிலவரங்கள் குறித்த அண்மைய தகவல்களைக் காணலாம் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.