‘காஸாவின் அல்-‌ஷிஃபா மருத்துவமனை ஒரு மரணப் பகுதி’

‘காஸாவின் அல்-‌ஷிஃபா மருத்துவமனை ஒரு மரணப் பகுதி’

2 mins read
70eb74af-65c0-4cba-a388-0a5415f3dcff
காஸாவில் உள்ள அல்-‌ஷிஃபா மருத்துவமனை. - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

காஸா: வட காஸாவில் உள்ள அல்-‌‌ஷிஃபா மருத்துவமனை ஒரு மரணப் பகுதியாகக் காட்சியளிக்கிறது என்று மனிதாபிமானக் குழு ஒன்று தெரிவித்ததாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

மனிதாபிமான அம்சங்களை ஆராயும் அக்குழு, அல்-‌‌ஷிஃபா மருத்துவமனையில் துப்பாக்கிச்சூடு, குண்டுவீச்சு இடம்பெற்றதற்கான அறிகுறிகள் இருந்ததாகக் குறிப்பிட்டது.

உலக சுகாதார நிறுவனத்தின் தலைமையிலான அந்த மனிதாபிமானக் குழுவில் ஐக்கிய நாட்டு சபையின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த சுகாதார வல்லுநர்கள், தளவாட அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். பாதுகாப்புக் காரணங்களால் சனிக்கிழமையன்று அக்குழுவால் மருத்துவமனையில் ஒரு மணிநேரத்துக்கு மட்டுமே இருக்க முடிந்ததாக உலக சுகாதார நிறுவனம் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

அல்-‌ஷிஃபா மருத்துவமனை ஒரு மரணப் பகுதியாக இருக்கிறது என்றும் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது என்றும் மனிதாபிமானக் குழு விளக்கியது. சுத்தமான நீர், எரிசக்தி, மருந்து போன்ற அத்தியாவசியப் பொருள்களும் அம்சங்களும் இல்லாததால் அல்-‌ஷிஃபா ஒரு மருத்துவ நிலையமாகச் செயல்படவில்லை என்றும் குழு சுட்டியது.

“குண்டு வீசப்பட்டதற்கும் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றதற்குமான அறிகுறிகள் இருந்தன. மருத்துவமனையின் நுழைவாயிலில் பலர் புதைக்கப்பட்டிருந்த சுடுகாட்டைக் குழு கண்டது. அங்கு 80க்கும் அதிகமான உடல்கள் புதைக்கப்பட்டிருந்ததாகவும் குழுவிடம் தெரிவிக்கப்பட்டது,” என்று உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

மருத்துவமனையின் வளாகங்கள் உள்ளிட்ட பகுதிகளில் மருத்துவக் கழிவு போன்றவை அதிகம் காணப்பட்டன என்றும் அங்குள்ள நோயாளிகள், ஊழியர்கள் ஆகியோர் தங்களின் சுகாதாரத்தையும் பாதுகாப்பையும் எண்ணி அஞ்சுவதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

ஆகக் கடைசி நிலவரப்படி அல்‌-ஷிஃபா மருத்துவமனையில் 25 சுகாதாரத்துறை ஊழியர்களும் 291 நோயாளிகளும் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறியது. அந்த நோயாளிகளில் கவலைக்கிடமாக உள்ள 32 குழந்தைகளும் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்