பாரம்பரிய அரசதந்திர முயற்சிகளை சீனா பொருட்படுத்தவில்லை: பிலிப்பீன்ஸ்

பாரம்பரிய அரசதந்திர முயற்சிகளை சீனா பொருட்படுத்தவில்லை: பிலிப்பீன்ஸ்

1 mins read
ebd20f66-62d0-4184-8025-1e5391546f7a
பிலிப்பீன்ஸ் அதிபர் ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர். - படம்: ராய்ட்டர்ஸ்

மணிலா: பிலிப்பீன்ஸ் அதிபர் ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர், தென் சீனக் கடல் விவகாரத்தைத் தமது நாடு கையாளும் முறையில் மாற்றம் தேவை என்று கூறியிருக்கிறார். பெய்ஜிங்குடனான அரசதந்திர முயற்சிகளில் பின்னடைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் அவ்வாறு கூறினார்.

டிசம்பர் 16ஆம் தேதி ஜப்பானிய ஊடகத்திற்கு அளித்த நேர்காணலில் அதிபர் மார்கோஸ் தமது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார். அதன் சில பகுதிகள் பிலிப்பீன்ஸ் ஊடகங்களில் டிசம்பர் 18ஆம் தேதி வெளியாயின.

பாரம்பரிய அரசதந்திர முயற்சிகளைச் சீனா பொருட்படுத்தவில்லை என்று அந்த நேர்காணலில் திரு மார்கோஸ் குறிப்பிட்டதாக பிலிப்பீன்ஸ் அதிபர் மாளிகை குறிப்பிட்டுள்ளது.

“இதுவரை பாரம்பரிய அரசதந்திர முயற்சிகளை மேற்கொண்டோம். பல்லாண்டுகாலமாக மேற்கொள்ளப்பட்ட அம்முயற்சிகளால் சிறிதளவே முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது,” என்று திரு மார்கோஸ் கூறினார்.

“அரசதந்திர முயற்சிகளில் பெரிய அளவிலான மாற்றம் தேவை,” என்று தென் சீனக் கடல் விவகாரத்தில் தொடர்பிருப்பதாகக் கருதும் நாடுகளிடம் அவர் கூறினார். அதேவேளையில் பிரச்சினைக்கு வன்முறை மூலம் தீர்வுகாண்பதைத் தவிர்க்க விரும்புவதாகவும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

மேற்கு பிலிப்பீன்ஸ் கடல் தொடர்பில் பங்காளித்துவ நாடுகளுடன் கலந்து பேசி முடிவுக்கு வரத் தமது அரசாங்கம் விரும்புவதாக திரு மார்கோஸ் கூறினார். தென் சீனக் கடலில் தான் உரிமை கோரும் பகுதியை பிலிப்பீன்ஸ், மேற்கு பிலிப்பீன்ஸ் கடல் என்று அழைக்கிறது.

ஜப்பானில் நடைபெறும் ஆசியான் உச்சநிலை மாநாட்டில் கலந்துகொள்ள அதிபர் மார்கோஸ் ஜப்பான் சென்றுள்ளார்.

குறிப்புச் சொற்கள்