விபரீதத்தில் முடிந்த வான்குடை சாகசம்

விபரீதத்தில் முடிந்த வான்குடை சாகசம்

1 mins read
7c381f7c-58d8-4ef9-a9d5-42939fe93901
கூட்டுரிமை வீட்டு வளாகத்தினுள் ஆடவர் அத்துமீறிச் சென்று சாகசம் புரிய முயற்சி செய்ததாகப் பாதுகாப்பு அதிகாரிகள் கூறியுள்ளனர். - படம்: இணையம்

பேங்காக்: வான்குடை இயங்காத காரணத்தால் 29 மாடி உயரத்திலிருந்து தாவிய பிரிட்டிஷ் நாட்டவர் ஒருவர் ஜனவரி 27ஆம் தேதியன்று உயிரிழந்தார்.

தாய்லாந்தின் பட்டாயா நகரில் அமைந்துள்ள கூட்டுரிமை வீட்டு வளாகத்தினுள் 33 வயது திரு நேத்தி ஓடின்சன் திருட்டுத்தனமாகச் சென்று வான்குடை சாகசம் புரிய முயன்றபோது இந்த விபரீதம் நடந்தது.

அன்றைய தினம் 7.30 மணியளவில் தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர், தரையில் திரு ஓடின்சனின் உடல் கிடப்பதைக் கண்டனர்.

அவர் உடலின் மீது முழுமையாக விரிக்கப்படாத நீல நிற வான்குடை ஒன்றும் இருந்ததாகக் கூறப்படுகிறது.

நண்பர் கீழே இருந்தவாறு காணொளி பதிவுசெய்ய, திரு ஓடின்சன் மேலிருந்து விழுவதாக இருந்தது.

ஆனால், வான்குடை இயங்காமல் போக, திரு ஓடின்சனின் உடல் மரக்கிளைகள் மீது பட்டு பின்னர் தரையில் விழுந்தது.

இதற்கிடையே, காணொளி பதிவுசெய்வதற்காக வந்திருந்த நண்பரைக் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

திரு ஓடின்சனின் ‘Nathy’s Sky Photography’ ஃபேஸ்புக் பக்கம் இதுவரை 5,000 ‘லைக்ஸ்’ பெற்றுள்ளது என்றும் பக்கத்தைப் பின்தொடர்வோர் 10,000க்கும் மேல் என்றும் அறியப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்