பிலிப்பீன்சில் கத்தோலிக்க தேவாலயத்தில் விபத்து: ஒருவர் மரணம்

பிலிப்பீன்சில் கத்தோலிக்க தேவாலயத்தில் விபத்து: ஒருவர் மரணம்

1 mins read
72aa533e-5dd5-4b64-bfb4-80e29d5a001b
சான் ஹோசே டெல் மோன்டே நகரில் உள்ள தேவாலயத்தில் இச்சம்பவம் நிகழ்ந்தது. - படம்: ஏஎஃப்பி

மணிலா: பிலிப்பீன்சின் புலாக்கான் மாநிலத்தில் உள்ள சான் ஹோசே டெல் மோன்டே நகரில் இருக்கும் கத்தோலிக்க தேவாலயம் ஒன்றில் மாடி முகப்புப் பகுதி இடிந்து விழுந்ததில் குறைந்தது ஒருவர் உயிரிழந்தார்.

புதன்கிழமையன்று (14 பிப்ரவரி) நிகழ்ந்த அச்சம்பவத்தில் குறைந்தது 53 பேர் காயமுற்றனர். உள்ளூர் பேரிடர் நிர்வாக அதிகாரிகள் இத்தகவல்களை வெளியிட்டனர்.

ஏ‌ஷ் புதன்கிழமை (ஏ‌ஷ் வெட்னஸ்டே) சடங்கை அனுசரிக்க பக்தர்கள் திரளாக தேவாலயங்களுக்குச் சென்ற நாளில் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்தது.

இச்சம்பவத்தில் 80 வயது மூதாட்டி ஒருவர் நெஞ்சில் ஏற்பட்ட காயங்களால் பலியானதாக சான் ஹோசே டெல் மோன்டே நகரின் குடிமைத் தற்காப்புப் படைத் தலைவர் ஜினா அய்சன் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். மரக்கட்டையால் ஆன 30 ஆண்டுப் பழைமைவாய்ந்த செயின்ட் பீட்டர் தி அப்போசல் தேவாலயத்தின் பகுதியை கறையான்கள் வலுவிழக்கச் செய்ததாக அவர் சொன்னார்.

கூட்டுப் பிரார்த்தனையின்போது அப்பகுதி இடிந்து விழுந்ததாக அய்சன் குறிப்பிட்டார். வழக்கத்துக்கு மாறாக அதிக எடையைத் தாங்கவேண்டிய நிலை ஏற்பட்டதால் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்திருக்கக்கூடும் என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்