தாய்லாந்து முன்னாள் பிரதமர் பரோலில் விடுதலை

தாய்லாந்து முன்னாள் பிரதமர் பரோலில் விடுதலை

2 mins read
887f0b64-262c-4b2c-8f31-6023a9445c05
தனது மகளுடன் மருத்துவமனையிலிருந்து புறப்பட்ட தக்சின் (வலது). - படம்: ராய்ட்டர்ஸ்
multi-img1 of 2

பேங்காக்: தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ‌ஷினவத்ர ஞாயிற்றுக்கிழமையன்று (18 பிப்ரவரி) பரோலில் விடுவிக்கப்பட்டதாக அவரின் வழக்கறிஞர் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து 15 ஆண்டுகளில் முதன்முறையாக அவர் தாய்லாந்தில் சுதந்திரமாக இருக்க நேரிட்டது. தாய்லாந்து ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு தக்சின் அந்நாட்டைவிட்டுத் தப்பியோடினார்.

பதவியைத் தவறாகப் பயன்படுத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டிருந்தன.

தக்சினுக்கு விதிக்கப்பட்ட எட்டு ஆண்டுச் சிறைத் தண்டனையை தாய்லாந்து மன்னர் ஓராண்டுக்குக் குறைத்தார். அதனையடுத்து கடந்த ஆறு மாதங்களாக அவர் மருத்துவமனையில் தடுப்புக் காவலில் இருந்து வந்தார்.

கறுப்பு நிற மெர்சிடிஸ் வாகனத்தில் 74 வயதாகும் தக்சின், ஞாயிற்றுக்கிழமையன்று மருத்துவமனையிலிருந்து புறப்பட்டதை ராய்ட்டர்ஸ் செய்தியாளர்கள் கண்டனர். அந்த வாகனத்தில் தனது மகளும் ஆளும் ஃபியு தாய் கட்சியின் தலைவருமான பய்த்தொங்டார்ன் ‌ஷினவத்ராவுக்கு அருகே அவர் அமர்ந்திருந்தார்.

சுமார் 25 நிமிடங்கள் கழித்து அந்த வாகனம் அவர்களின் குடும்ப பங்களாவைச் சென்றடைந்தது.

பிப்ரவரி 18ஆம் தேதியன்று தக்சினை பரோலில் விடுவிக்கத் திட்டமிடப்பட்டிருந்ததாக தாய்லாந்துப் பிரதமர் ஸ்ரெத்தா தவிசின் தெரிவித்தார். திரு தக்சினின் வயது, அவரின் உடல்நலப் பிரச்சினைகள் உள்ளிட்ட அம்சங்களைக் கருத்தில்கொள்ளும்போது அவரை பரோலில் விடுவிக்க முடியும் என்றும் திரு ஸ்ரெத்தா கூறினார்.

“தக்சின் வீடு திரும்பிவிட்டார். அவர் ஆரோக்கியமாக இருப்பார் என்று நம்பிக்கை கொண்டுள்ளேன்,” என்று இன்ஸ்டகிராமில் திருவாட்டி பய்த்தொங்டார்னின் ரசிகர் (ஃபாலோவர்) ஒருவர் பதிவிட்டார். அதை திருவாட்டி பய்த்தொங்டார்ன் தனது இன்ஸ்டகிராம் கணக்கில் பகிர்ந்துகொண்டார்.

பரோலில் விடுவிக்கப்படுவதற்கான நடைமுறைகளைத் தனது கட்சிக்காரர் மேற்கொண்டதாகவும் அவர் அதிகாரபூர்வமாக விடுவிக்கப்பட்டதாகவும் தக்சினின் வழக்கறிஞர் வின்யாட் சார்ட்மொன்ட்ரி ராய்ட்டர்சிடம் குறிப்பிட்டார்.

சிறைத் தண்டனையை நிறைவேற்றாமல் இருக்க 15 ஆண்டுகளாக வெளிநாட்டில் இருந்த தக்சின், அரசியல் உள்நோக்கத்துடன் தன் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதாகக் கூறி வந்துள்ளார்.

சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவர் நாடு திரும்பினார். ஆதரவாளர்கள் திரளாகச் சென்று அவரை வரவேற்றனர்.

குறிப்புச் சொற்கள்