தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சூடான் சண்டை நிறுத்தத்திற்கு ஐநா வலியுறுத்து

2 mins read
3419b562-072d-4803-8b3e-4749da2a77ac
சென்ற ஆகஸ்ட்டில் சூடானிலிருந்து வெளியேறும் மக்கள். - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

ஐநா: ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு மன்றம் சூடானில் உடனடியாக சண்டை நிறுத்தம் அமலுக்கு வரவேண்டும் என்று வெள்ளிக்கிழமை (மார்ச் 8) வலியுறுத்தியது.

அதையடுத்து, காஸாவில் இஸ்‌ரேலுக்கும் ஹமாஸ் தரப்புக்கும் இடையிலான போரை மறந்துவிட வேண்டாமெனச் சீனா அதற்குப் பதிலளித்தது. அமெரிக்காவின் இரட்டைக் கொள்கையை ரஷ்யா குறைகூறியது.

ரமலான் நோன்பு மாதத்தில் சூடானில் உடனடிச் சண்டை நிறுத்தத்திற்கு வலியுறுத்தும் தீர்மானத்தை பிரிட்டன் வரைந்துள்ளது. ஐநா பாதுகாப்பு மன்றத்தின் உறுப்பு நாடுகள் 14, அதற்கு ஆதரவாக வாக்களித்தன. ரஷ்யா வாக்களிக்கவில்லை.

சூடானில் சென்ற ஆண்டு (2023) ஏப்ரல் 15ஆம் தேதி, அந்நாட்டு ராணுவத்திற்கும் அதிவேக ஆதரவுப் படை (ஆர்எஸ்எஃப்) எனும் துணை ராணுவப் படைக்கும் இடையிலான போர் தொடங்கியது.

அப்போரில் பாதிக்கப்பட்ட கிட்டத்தட்ட 25 மில்லியன் பேருக்கு நிவாரண உதவி தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகள் நிறுவனம் (ஐநா) கூறுகிறது. அந்த எண்ணிக்கை, சூடானின் மக்கள்தொகையில் 50 விழுக்காடு. அவர்களில் 8 மில்லியன் பேர் வீடுகளை விட்டு வெளியேறிவிட்டதாகவும் பசி, பட்டினிச் சூழல் அதிகரிப்பதாகவும் கூறப்படுகிறது.

போரிடும் தரப்புகள் இரண்டுமே போர்க் குற்றங்களைப் புரிந்திருப்பதாக வாஷிங்டன் கூறுகிறது.

சூடானின் மேற்குப் பகுதியில் ஒரே நகரத்தில் 10,000 முதல் 15,000 பேர், சென்ற ஆண்டு கொல்லப்பட்டதாக அறிக்கை ஒன்று குறிப்பிடுவதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்தது.

இந்நிலையில், காஸாவில் சண்டை நிறுத்தம் தொடர்பான தீர்மானத்தை ஆதரிக்காத அமெரிக்கா இரட்டைத் தரநிலையைக் கடைப்பிடிப்பதாக ரஷ்யா சாடியது.

“ரமலான் மாதத்தில் சூடானில் சண்டை நிறுத்தம் தேவை என்ற தீர்மானத்தை ஏற்றுக்கொள்ளும் வேளையில் குண்டுவீச்சால் அவதியுறும் காஸா மக்களை மறந்துவிடக்கூடாது. அனைத்துலகச் சமூகம் காஸாவில் உடனடிச் சண்டை நிறுத்தத்தை வலியுறுத்த வேண்டும்,” என்று சீனா கூறியது.

குறிப்புச் சொற்கள்