2,000 டன் உணவுப் பொருள்கள் காஸாவிற்கு அனுப்பப்பட்டதாக பிரிட்டன் தகவல்

2,000 டன் உணவுப் பொருள்கள் காஸாவிற்கு அனுப்பப்பட்டதாக பிரிட்டன் தகவல்

1 mins read
2ac7d6c4-f276-4291-948b-ce0ceee30d14
தேவையுள்ள குடும்பங்களுக்கு உணவுப்பொருள்கள் விநியோகிக்கப்படுவதாக பிரிட்டனின் வெளியுறவு அமைச்சு தெரிவித்தது. - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

லண்டன்: பிரிட்டன் அனுப்பிய 2,000 டன் உணவுப் பொருள்கள், ஜோர்தான் வழியாக காஸா சென்றடைந்ததாக பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாட்டு நிறுவன உலக உணவுத் திட்டம் மூலம் தேவையுள்ள குடும்பங்களுக்கு அவை விநியோகிக்கப்படுவதாக மார்ச் 20ஆம் தேதி அது கூறியது.

காஸாவில் உணவு, மருந்துப் பொருள்கள், சுத்தமான நீருக்குப் பற்றாக்குறை நிலவுவதாக உதவி அமைப்புகள் தெரிவித்தன.

காஸா மக்கள்தொகையில் கிட்டத்தட்ட பாதிப் பேர் கடுமையான பசியால் வாடுவதாகக் கூறிய ஐக்கிய நாட்டு நிறுவன ஆதரவிலான அறிக்கை, அங்கு பஞ்சம் ஏற்படக்கூடுமென்று முன்னுரைத்துள்ளது.

“கூடுதலான உதவிப்பொருள்கள் காஸா சென்றடைய, நீடித்த முறையில் சாலை வழியாக அவை அனுப்பப்படுவதற்கு ஏற்பாடு செய்யவேண்டும்,” என்று பிரிட்டனின் வெளியுறவு அமைச்சர் டேவிட் கேமரன் வலியுறுத்தியுள்ளார்.

“மனிதநேய உதவிப்பொருள்கள் காஸாவிற்குள் நுழைவதற்கு எல்லைப் பகுதியில் கூடுதலான இடங்களில், நீண்டகாலத்திற்கு நுழைவாயில்களைத் திறக்கும்படி இஸ்ரேலிடம் தொடர்ந்து வலியுறுத்துகிறோம்.

“சுகாதாரப் பராமரிப்பு, தண்ணீர், துப்புரவுச் சேவை போன்றவற்றை மீண்டும் நடைமுறைப்படுத்தவும் கேட்டுக்கொண்டுள்ளோம்,” என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

உலக உணவுத் திட்டம் மூலம் விநியோகிக்கப்படும் பிரிட்டனின் உணவுப் பொட்டலங்கள், காஸாவிலுள்ள 275,000 பேருக்குப் போதுமானவையாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும், 150 டன் எடையிலான கூடாரங்கள், போர்வைகள் உள்ளிட்ட நிவாரணப் பொருள்களையும் பிரிட்டன் அனுப்பியுள்ளது.

குறிப்புச் சொற்கள்