தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மியன்மாரிலிருந்து தொடர்ந்து பலர் தாய்லாந்துக்குத் தப்பியோட்டம்

2 mins read
740ff777-39d4-44a8-a6f9-d9fd85120835
மியன்மாரின் மியாவடி நகரையும் தாய்லாந்தையும் பிரிக்கும் மோய் ஆறு வழியாகத் தப்பியோடும் சிறுவர்கள். - படம்: ராய்ட்டர்ஸ்

மே சொட் (தாய்லாந்து): மியன்மாரிலிருந்து தாய்லாந்துக்குத் தப்பியோட பலர் வெள்ளிக்கிழமையன்று (ஏப்ரல் 12) இருநாட்டு எல்லைப் பகுதியில் திரளாக வரிசையில் நின்றனர்.

எல்லைப் பகுதியில் உள்ள மியன்மாரின் மியாவடி நகரம் அந்நாட்டு ராணுவத்துக்கு எதிராக இயங்கும் கிளர்ச்சியாளர்களின் வசம் சென்றது. உத்திபூர்வ காரணங்களுக்காக முக்கியமானதாகக் கருதப்படும் அந்நகரில் இந்நிலை உருவானதைத் தொடர்ந்து பலர் தப்பியோட முயன்று வருகின்றனர்.

மியன்மாரின் கிளர்ச்சியாளர்கள் வலுவடைந்து வருகின்றனர்.

மியாவடி நகரை இழந்துள்ளதால் எல்லைகளில் மேற்கொள்ளப்படும் வர்த்தகத்திலிருந்து மியன்மாரின் ராணுவ அரசாங்கம் ஈட்டும் வருமானம் பாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, கேரன் தேசிய ஒன்றியம் போன்ற அந்நாட்டின் கிளர்ச்சியாளர் படைகள் வலுவடைந்து வருவதாக கவனிப்பாளர்கள் கூறியுள்ளனர்.

மியன்மார் பொருளியல் சரிந்து வருகிறது; ஏற்கெனவே அப்பிரச்சினையை ராணுவ அரசாங்கம் எதிர்நோக்கிவரும் வேளையில் இச்சூழல் தலைதூக்கியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டது.

ஆகாயப் படைத் தாக்குதல்கள் இடம்பெறக்கூடும் என்ற அச்சம் தங்களிடையே இருப்பதாக மியாவடி நகரவாசிகள் சிலர் கூறினர். வெடிகுண்டு சத்தம் தங்கள் வீடுகளை உலுக்கியதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதுபோன்ற காரணங்களால் தாங்கள் தாய்லாந்துக்குத் தப்பியோடுவதாகப் பாதிக்கப்பட்டோர் கூறினர்.

மியன்மாரின் மியாவடி நகருக்கு அருகே உள்ள தாய்லாந்தின் மே சொட் நகருக்கு வெள்ளிக்கிழமையன்று தாய்லாந்து வெளியுறவு அமைச்சர் பார்ன்பி பகித்தா-நுக்கரா நேரில் செல்லத் திட்டமிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. மியன்மாரின் ராணுவ அரசாங்கம் தங்கள்வசம் இருந்த வட்டாரங்களில் மேலும் சிலவற்றை இழந்ததைத் தொடர்ந்து எல்லையில் நிலவரத்தைக் கண்டறிய அவர் பயணம் மேற்கொள்ளவிருந்தார்.

மியன்மார் ராணுவம் 2021ஆம் ஆண்டில் அந்நாட்டின் ஜனநாயக அரசாங்கத்தைக் கவிழ்த்து ஆட்சியைக் கைப்பற்றியது. அதிலிருந்து மியன்மாரில் குழப்பநிலை தொடர்கிறது.

மியன்மார் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு நாடெங்கும் ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன. ஆர்ப்பாட்டங்களை வலுக்கட்டாயமாக அடக்கும் நடவடிக்கைகளை ராணுவ அரசாங்கம் மேற்கொண்டது.

குறிப்புச் சொற்கள்