தென்சீனக் கடல் தொடர்பில் முத்தரப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம்

தென்சீனக் கடல் தொடர்பில் முத்தரப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம்

1 mins read
c92dcde5-7c06-4cae-9800-0ea9814cabad
ஏப்ரல் 11ஆம் தேதி வெள்ளை மாளிகையில் நடந்த முத்தரப்பு உச்சநிலை மாநாட்டிற்கு பிலிப்பீன்ஸ் அதிபர் ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் (இடம்), ஜப்பானியப் பிரதமர் ஃபுமியோ கிஷிதா (வலம்) இருவரையும் வரவேற்று அழைத்துச்செல்லும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன். - படம்: ராய்ட்டர்ஸ்

வாஷிங்டன்: பிலிப்பீன்ஸ், அமெரிக்கா, ஜப்பான் ஆகியவற்றுக்கு இடையிலான முத்தரப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் தென்சீனக் கடற்பகுதியிலும் இந்த வட்டாரத்திலும் நிலைமையை மேம்படுத்த உதவும் என்று பிலிப்பீன்ஸ் அதிபர் ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் கூறியுள்ளார்.

சீனாவைக் குறிவைத்து இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்படவில்லை என்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 12) அவர் உறுதிப்படுத்தினார்.

வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜப்பானியப் பிரதமர் ஃபுமியோ கிஷிதா இருவரையும் முத்தரப்பு உச்சநிலை மாநாட்டில் சந்தித்துப் பேசிய மறுநாள் அதிபர் மார்கோஸ் வாஷிங்டனில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

“இந்த முத்தரப்பு ஒப்பந்தம் மிகவும் முக்கியமானது என்று கருதுகிறேன்,” என்றார் அவர்.

தென்சீனக் கடலைச் சுற்றியுள்ள பகுதிகளில், ஆசியாவில், ஆசியான் வட்டாரத்தில் இந்த ஒப்பந்தம் நிலைமையை மாற்றும் என்று திரு மார்கோஸ் கூறினார்.

சந்திப்பின்போது, தென்சீனக் கடல் வட்டாரத்தில் சீனாவின் அபாயகரமான, சினமூட்டும் நடவடிக்கைகள் குறித்து மூன்று தலைவர்களும் கவலை தெரிவித்ததாகக் கூறப்பட்டது.

இருப்பினும் இந்த உச்சநிலைச் சந்திப்பு எந்த நாட்டிற்கும் எதிரானது அன்று எனவும் முத்தரப்புக்கும் இடையிலான பொருளியல், பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டதாகவும் அதிபர் மார்கோஸ் குறிப்பிட்டார்.

ஓர் ஆண்டில் கிட்டத்தட்ட $3 டிரில்லியன் மதிப்பிலான கடல்வழி வர்த்தகத்திற்குப் பாதையாக விளங்கும் தென்சீனக் கடற்பகுதிக்குச் சீனா உரிமை கொண்டாடுகிறது. இதன் தொடர்பில் பிலிப்பீன்ஸ் உள்ளிட்ட இதர நாடுகளுக்கும் சீனாவிற்கும் இடையில் சர்ச்சை நிலவுகிறது.

குறிப்புச் சொற்கள்