34 பேர் உயிரிழந்த தீ விபத்து தொடர்பில் படகின் மாலுமிக்குச் சிறைத்தண்டனை

34 பேர் உயிரிழந்த தீ விபத்து தொடர்பில் படகின் மாலுமிக்குச் சிறைத்தண்டனை

2 mins read
உயிரிழந்த 34 பேரில் இருவர் சிங்கப்பூரர்கள்
72151ea4-2916-4a76-8cbe-87594302478e
2019ஆம் ஆண்டு தெற்கு கலிஃபோர்னியாவின் கரைக்கருகே நடந்த தீ விபத்தில், அந்தப் படகில் பயணம் செய்த 33 பயணிகளும் சிப்பந்திகளும் உயிரிழந்தனர். - படம்: யூடியூப் காணொளி

லாஸ் ஏஞ்சலிஸ்: 2019ஆம் ஆண்டு தெற்குக் கலிஃபோர்னியாவின் கரையருகே படகு ஒன்று தீப்பிடித்ததில் 33 பயணிகளும் சிப்பந்திகளும் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அப்படகின் மாலுமிக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டோரின் உறவினர்கள் அளித்த சாட்சியங்களுடன் மிக நீண்ட விசாரணைக்குப் பிறகு மே 2ஆம் தேதி அந்த மாலுமிக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.

மாலுமி ஜெர்ரி நெஹ்ல் பாய்லனின் தவறான நடத்தை அல்லது அலட்சியத்தால்தான் விபத்து நிகழ்ந்ததாக நவம்பரில் கண்டறியப்பட்டது.

70 வயதாகும் பாய்லன், ‘கான்செப்ஷன்’ எனும் முக்குளிப்புப் படகின் மாலுமியாக இருந்தார். 2019ஆம் ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதி அதிகாலை சாண்டா குருஸ் தீவில் நங்கூரமிடப்பட்டிருந்த அப்படகு தீப்பிடித்துக்கொண்டது.

அதையடுத்து பாய்லனும் மேலும் நான்கு சிப்பந்திகளும் அதிலிருந்து தப்பித்தனர். ஆனால் படகில் உறங்கிக் கொண்டிருந்த 33 பயணிகளும் உயிரிழந்தனர். சிப்பந்தி ஒருவரும் மாண்டார். மாண்டோரில் இருவர் சிங்கப்பூரர்கள். அவர்கள், கலிஃபோர்னியா பல்கலைக்கழக மாணவரான 26 வயது டான் வெய், 46 வயது ஆய்வாளர் சுனில் சிங் சாந்து என்று கூறப்பட்டது.

பாய்லன் அவர்களைக் காப்பாற்றத் தவறிவிட்டதாக அரசாங்கத் தரப்பு வாதிட்டது.

இருப்பினும் பாய்லனின் வயது, நீண்டகாலமாக அவருக்கிருந்த முதுகு வலி, உயர் ரத்த அழுத்தம் ஆகிய உடல்நலப் பிரச்சினைகளைக் கருத்தில்கொண்டு தண்டனை விதிக்கப்பட்டதாக நீதிபதி கூறினார்.

விபத்துக்குப் பிறகு பாய்லன் ஒவ்வொரு நாளும் அதை நினைத்து அழுததாகவும் நடந்த தவற்றுக்கு அவர் வருத்தம் தெரிவித்ததாகவும் கூறப்பட்டது.

பாய்லன் இழப்பீடு வழங்க வேண்டியிருக்கும் என்றும் அதன் தொடர்பிலான விசாரணை ஜூலை 11ஆம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்
படகுதீவிபத்துஉயிரிழப்பு