போரினால் பாழ்பட்ட கல்வி அமைப்பு; படிப்பைத் தொடரப் போராடும் காஸா மக்கள்

போரினால் பாழ்பட்ட கல்வி அமைப்பு; படிப்பைத் தொடரப் போராடும் காஸா மக்கள்

3 mins read
54984200-526b-4450-9edc-8789bcf2d840
2024 ஏப்ரல் 28, அன்று காஸாவில் கான் யூனிஸ் அருகேயுள்ள கூடாரத்தில், மணலில் அமர்ந்து படிக்கும் மாணவர்கள். - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

காஸா: இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே ஏழு மாதங்களுக்கும் மேலாக நடக்கும் போரில் பள்ளிகளும் பல்கலைக்கழகங்களும் மூடப்பட்டு, சேதமடைந்தோ அல்லது அழிக்கப்பட்டோ உள்ள நிலையில், படிப்பை மீண்டும் தொடங்க தங்களால் முடிந்ததைச் செய்து வருகின்றனர் காஸா மக்கள்.

“மாணவர்கள் வருகிறார்கள். ஏராளமானவர்கள் இன்னும் காத்திருக்கிறார்கள்,” என்று அல் மவாசி கடற்கரைக்கு அருகிலுள்ள கூடாரப் பள்ளி ஒன்றின் தொண்டூழிய ஆசிரியரான அஸ்மா அல் அஸ்டல் கூறினார். அப்பள்ளி ஏப்ரல் பிற்பகுதியில் திறக்கப்பட்டது.

இஸ்ரேலியத் தாக்குதல்களால் குழந்தைகள் ஓராண்டு முழுவதும் பள்ளிப் படிப்பை இழக்க அனுமதிப்பதற்கு பதிலாக, “நாங்கள் அவர்களை இங்கு அழைத்து வந்து அவர்களுக்குப் பாடம் நடத்துகிறோம்,” என்று அவர் கூறினார்.

நம்பிக்கையும் பெருமையும் தரும் அரிய ஆதாரமான தங்கள் கல்வியை போர் பாழடித்து விடுமோ என்று காஸா மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

காஸாவும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரைப் பகுதியும் அனைத்துலக அளவில் கல்வியறிவு அதிகம் பெற்றவை. ஆனால், இஸ்ரேல் கடலோர பாலஸ்தீனப் பகுதிகளை முற்றுகையிட்டதாலும் தொடர் தாக்குதல்களை நடத்தி வருவதாலும் அங்கு படிப்பு பாதிக்கப்பட்டிருப்பதுடன் கற்றல் வளங்களையும் வெகுவாகக் குறைத்துள்ளன.

கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி மாதம் போர் தொடங்கியதிலிருந்து, பள்ளிகள் வெடிகுண்டுகளால் தாக்கப்பட்டன அல்லது இடம்பெயர்ந்த மக்கள் தங்குமிடங்களாக மாற்றப்பட்டன. அதன் காரணமாக காஸாவின் கிட்டத்தட்ட 625,000 பள்ளி செல்லும் சிறுவர்கள் வகுப்புகளுக்குச் செல்ல முடியாது பாதிக்கப்பட்டுள்ளனர்.

காஸாவின் 12 உயர்கல்வி நிறுவனங்களும் அழிக்கப்பட்டுள்ளன அல்லது சேதமடைந்துள்ளன. இதனால் கிட்டத்தட்ட 90,000 மாணவர்கள் சிக்கித் தவிக்கின்றனர்.

மேலும் 350க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் கல்வியாளர்களும் கொல்லப்பட்டுள்ளனர் என்று பாலஸ்தீன அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

“நாங்கள் நண்பர்களை இழந்தோம், மருத்துவர்களை இழந்தோம், கற்பித்தல் உதவியாளர்களை இழந்தோம், பேராசிரியர்களை இழந்தோம், இந்தப் போரில் நாங்கள் பலவற்றையும் இழந்துவிட்டோம்,” என்று காஸாவின் அல் அசார் பல்கலைக்கழக நான்காவது ஆண்டு மருத்துவ மாணவரான இஸ்ரோ அஸூம் கூறினார்.

அலைமோதும் நோயாளிகளைச் சமாளிக்க முடியாமல் திணறும் டீர் அல் பலா நகரில் உள்ள அல் அக்ஸா மருத்துவமனையில் அஸூம் தொண்டூழியம் புரிகிறார். அறிவியலுடனான தொடர்பை இழந்து விடக்கூடாது என்ற அவரது உறுதிப்பாடும் அதற்கொரு காரணம்.

எகிப்துக்கு இடம்பெயர்ந்துள்ள பல்லாயிரக்கணக்கான காஸா மக்களும் சவால்களை எதிர்கொள்கின்றனர். ஒப்பீட்டளவில் பாதுகாப்பாக வாழ்ந்தாலும், தங்கள் குழந்தைகளை பள்ளிகளில் சேர்ப்பதற்கான ஆவணங்கள் அவர்களிடம் இல்லை. சிலர் மேற்குக் கரையில் இருந்து நடத்தப்படும் இணையம் வழி கற்றலில் சேர்ந்துள்ளனர். அங்கு பாலஸ்தீனர்கள், இஸ்ரேலிய ராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் வரையறுக்கப்பட்ட சுயாட்சியைக் கொண்டுள்ளனர்.

கெய்ரோவில் உள்ள பாலஸ்தீனத் தூதரகம் 800 உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வுகளை மேற்பார்வையிடத் திட்டமிட்டுள்ளது.

ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ள தெற்கு காஸாவில், ஐநா குழந்தைகள் நிறுவனமான யுனிசெஃப், சில அடிப்படைப் பாடங்களுடன் பாட்டு, நடனம் போன்ற பொழுதுபோக்கு நடவடிக்கைகளையும் ஏற்பாடு செய்து வருகிறது. அன்றாடம் மூன்று நேரங்களில் 6,000 சிறுவர்கள் படிக்கக்கூடிய வகையில் 50 கூடாரங்களை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது.

காஸாவில் உள்ள 72.5% பள்ளிகளுக்கு முழுமையான மறுசீரமைப்பு அல்லது கட்டுமானம் தேவை என்று ஐநா மதிப்பிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்